அமெரிக்கா, இந்தியப் பொருட்கள் மீது 50% இறக்குமதி வரி விதித்துள்ள நிலையில், இந்திய வர்த்தக அமைச்சகம் இதற்கு மாற்று வழிகளைத் தேடி வருகிறது. இந்த வரி, 25% பரஸ்பர வரியாகவும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு 25% அபராத வரியாகவும் விதிக்கப்பட்டுள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி, குறிப்பாக ஜவுளி, ரத்தினங்கள், ஆபரணங்கள், பர்னிச்சர், ரசாயனங்கள், மற்றும் தோல் பொருட்கள் துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக அமைச்சகம், இந்தப் பாதிப்பைச் சமாளிக்க மாற்று ஏற்றுமதி சந்தைகளை ஆராய்ந்து வருகிறது.
இதையும் படிங்க: இந்திய பொருட்கள் மீதான 25% கூடுதல் வரி.. நாளை முதல் அமல்.. அமெரிக்க அரசு அறிவிப்பு..!!
வியட்நாம், பங்களாதேஷ், மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்கவும், உள்நாட்டு சந்தையை விரிவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு தொழில்துறை பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, ஏற்றுமதி வாய்ப்புகளைப் பற்றி விவாதிக்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு இந்தியா ஆண்டுதோறும் $86.5 பில்லியன் மதிப்பில் ஏற்றுமதி செய்கிறது, இதில் $60 பில்லியன் பொருட்கள் இந்த வரியால் பாதிக்கப்படும் என பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.
அமெரிக்கா, இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சில பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்துள்ள நிலையில், இது குறுகிய கால பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றாலும், நீண்ட கால இழப்பாக இருக்காது என அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜவுளி, ரசாயனம் உள்ளிட்ட துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தொழில் துறையினர் குறுகிய காலத்தில் பணப்புழக்க நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. அதுமட்டுமின்றி ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் இந்திய பொருட்களின் ஏற்றுமதியை பன்முகப்படுத்த தொழில்துறைக்கு மத்திய வர்த்தக அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகம், ரஷ்ய எண்ணெய் இறக்குமதி பொருளாதார அவசியமென விளக்கியுள்ளது. உக்ரைன் போருக்குப் பிறகு மற்ற நாடுகள் எண்ணெய் விநியோகத்தைக் குறைத்ததால், ரஷ்ய எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், இதற்கு அமெரிக்காவே ஆதரவு அளித்ததாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் போது, இந்தியா மீது மட்டும் குற்றம் சாட்டுவது நியாயமற்றது என விமர்சித்துள்ளது. இந்த வரி விதிப்பு இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் அதே வேளையில், அமெரிக்க நுகர்வோருக்கு விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்தலாம். வர்த்தக அமைச்சகம், நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என உறுதியளித்துள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் தற்காலிக நிறுத்தம்.. ட்ரம்பின் வரி உயர்வுக்கு இந்தியாவின் பதிலடி..!!