ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் திறந்த விவாதத்தில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் உரையாற்றினார். பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான இந்த விவாதத்தில் அவர் பேசியபோது, போர்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை ஒரு அரசியல் ஆயுதமாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஐநா பொதுச்செயலாளர் மற்றும் பாலியல் வன்முறை தொடர்பான சிறப்புப் பிரதிநிதியின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி அவர் கூறியதாவது: சுமார் 75 கோடி பெண்கள் போர் நடக்கும் பகுதிகளில் இருந்து 50 கிலோமீட்டர் எல்லைக்குள் வாழ்கின்றனர். போர் தொடர்பான பாலியல் வன்முறை வழக்குகள் ஒரே ஆண்டில் இரட்டிப்பாகி உள்ளன. யுத்தப் படைகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கூடுதல் பாதுகாப்பை அளிக்க உதவும் என்றார்.
ஐநா அமைதிப்படை அதிகாரிகளாக மேஜர் சோனியா தேவேந்திர நிவாஸ்கர் மற்றும் மேஜர் மொயிஸ் யாசீன் ஆகிய இரு இந்திய ராணுவ மேஜர்கள் பணியாற்றி வருகின்றனர் என அவர் தெரிவித்தார். தெற்கு சூடானில் உள்ள ஐநா மிஷனில் இவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக பயனுள்ளதாக அமைந்துள்ளன எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: ஐநா வீட்டோ அதிகாரம்! அனைத்து நிரந்தர உறுப்பினர்களுக்கும் வேண்டும்!! இந்தியா வலியுறுத்தல்!

இந்திய ஆயுதப் படைகளில் பெண்களின் பங்கை அதிகரிக்க சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. போர் பிரிவுகள் உட்பட அனைத்துப் பிரிவுகளிலும் பெண்கள் அதிகாரிகளாகச் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் போர் விமானிகள் முதல் ராணுவ தூதர்கள் வரை பல்வேறு பொறுப்புகள் பெண்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன என அவர் விளக்கினார்.
2023ஆம் ஆண்டின் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தின் மூலம் பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அரசியல் முடிவெடுக்கும் இடங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் நிலையான தீர்வுகளுக்கு வழிவகுக்கும் என ஹரிஷ் கூறினார். ஐநா தீர்மானம் 1325ஐ முழுமையாக அமல்படுத்தவும், 2030க்குள் பாலின சமத்துவத்தை அடையவும் இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கொலை செய்யணுமா..?? இதுதான் நம்பர்..!! சென்னை மாநகர பஸ்சில் ஹிண்ட் கொடுத்த ரவுடி கைது!!