சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் சுமார் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. உலகளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் டேட்டா சென்டர்களுக்கான முதலீடுகள் அதிகரித்து வரும் நிலையில், மின்னணு பொருட்களுக்கான தேவை உயர்ந்திருப்பது இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசின் வர்த்தக தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில் சீனாவுக்கான இந்திய ஏற்றுமதியில் ஸ்மார்ட்போன்கள், தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் பிரின்டட் சர்க்யூட் போர்டுகள் உள்ளிட்ட மின்னணு பொருட்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் சீனாவுடனான வர்த்தகத்தில் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு சுமார் ரூ.30,210 கோடியாக உயர்ந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்திலும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 15 சதவீதத்துக்கும் அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளது. இதேபோல், இயந்திரங்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொறியியல் பொருட்களின் ஏற்றுமதியும் சுமார் 21 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: “AI மனித இனத்துக்கே அச்சுறுத்தலாகலாம்” - கூகுள் டீப்மைண்ட் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அதிரடி விலகல்!

உலகளவில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு வேகமாக விரிவடைந்து வருவதால், அதற்கு தேவையான சர்வர், மின்னணு உதிரிபாகங்கள் மற்றும் பிற தொழில்நுட்பப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. டேட்டா சென்டர்களின் எண்ணிக்கை மற்றும் கட்டுமானப் பணிகள் அதிகரிப்பதும் இந்திய உற்பத்தியாளர்களுக்கு புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்குவதாக தொழில்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் வர்த்தக மற்றும் வரி கொள்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும், சீனாவுக்கான இந்திய ஏற்றுமதியின் அதிகரிப்பும் இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என ஏற்றுமதியாளர்கள் கருதுகின்றனர்.
எனினும், ஏற்றுமதி அதிகரித்துள்ள போதிலும் இந்தியா-சீனா வர்த்தகப் பற்றாக்குறையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. கடந்த நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சீனாவுக்கான ஏற்றுமதியின் பங்கு 4.40 சதவீதமாக இருந்தது. அதே நேரத்தில், சீனாவில் இருந்து இந்தியா சுமார் ரூ.12.50 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.
இதனால், சீனாவுக்கான ஏற்றுமதி தொடர்ந்து அதிகரிப்பதுடன், வர்த்தக இடைவெளியையும் குறைக்க வேண்டும் என்பதே இந்திய தொழில்துறையின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: மக்கள் வரிப்பணத்தில் சொகுசு அறை ஒரு கேடா..? வெட்கமா இல்லையா CM சார்..? அப்பாவு தாக்கு.!