இந்தியாவில் ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டில் முக்கியமான மாற்றத்துக்கு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி தயாராகி வருகின்றன. வழக்கமான காகித நோட்டுகளுக்கு மாற்றாக, அதிக நீடித்த தன்மை கொண்ட பாலிமர் எனப்படும் ‘பிளாஸ்டிக்’ நோட்டுகளை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
முதற்கட்டமாக ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான பாலிமர் நோட்டுகளை சோதனை அடிப்படையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மதிப்பிலும் தலா 100 கோடி நோட்டுகள் தயாரிக்க திட்டம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திட்டத்துக்கு மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் தெரிவித்திருந்தார்.
இதற்கான அடுத்தகட்ட பணிகளில் ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் நிறுவனம் இறங்கியுள்ளது. பாலிமர் நோட்டுகளை தயாரிக்க தேவையான மூலப்பொருளான சிறப்பு பிளாஸ்டிக் தாளை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு ஜாக்பாட்! அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.69 லட்சம் கோடியாக உயர்வு – புதிய சாதனை
டெண்டர் நிபந்தனைகளின்படி, ரூ.10 நோட்டுகளுக்கு 34 ஆயிரம் ரீம்களும், ரூ.20 நோட்டுகளுக்கு 34 ஆயிரம் ரீம்களும் என மொத்தம் 68 ஆயிரம் ரீம் பாலிமர் தாள்கள் தேவைப்படுகின்றன.

இந்த டெண்டரில் இந்தியாவைச் சேர்ந்த யூப்ளெக்ஸ் நிறுவனம், அமெரிக்காவின் ஸ்பெக்ட்ரா சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிமர் நோட்டுகளுக்கு BOPP எனப்படும் சிறப்பு வகை பாலிப்ரொப்பிலீன் தாள் பயன்படுத்தப்பட உள்ளது.
பெரிய அளவில் கொள்முதல் செய்வதற்கு முன்பாக, இந்த தாளின் தொழில்நுட்ப தரம், பாதுகாப்பு அம்சங்கள், அச்சிடும் திறன் மற்றும் தொடர்ச்சியான விநியோக திறன் ஆகியவை பரிசோதிக்கப்பட உள்ளன.
உலகின் சுமார் 60 நாடுகளில் பாலிமர் நோட்டுகள் முழுமையாகவோ அல்லது குறிப்பிட்ட அளவிலோ பயன்பாட்டில் உள்ளன. பிரிட்டன், கனடா, நியூசிலாந்து, சிங்கப்பூர், வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே பாலிமர் நோட்டுகளை பயன்படுத்துகின்றன.
இந்தியாவில் இவை அறிமுகப்படுத்தப்பட்டால், நோட்டுகளின் ஆயுட்காலம், கள்ளநோட்டு தடுப்பு மற்றும் பயன்பாட்டில் நீடித்த தன்மை போன்ற அம்சங்களில் மாற்றம் ஏற்படுமா என்பது சோதனை முடிவுகளுக்குப் பிறகே தெளிவாகும்.
இதையும் படிங்க: #BREAKING தேடப்படும் குற்றவாளியுடன் சி.எம்.விஜய்... கை காட்டி வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?... வீடியோ ஆதாரத்துடன் பகீர் கிளப்பிய அதிமுக...!