ஐக்கிய நாடுகள் சபையின் (ஐநா) 80வது பொதுச் சபை கூட்டத்தில், குழந்தைகள் மீது ஆயுதங்கள் கொண்டு நிகழ்த்தப்படும் வன்முறை (CAAC) தொடர்பான அமர்வில் இந்தியாவைப் பிரதிநிதித்துவம் செய்த பாஜக தேசிய மக்சபை உறுப்பினர் நிஷிகாந்த் துபே, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை கடுமையாக விமர்சித்தார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்டவற்றை எடுத்துக்காட்டி, பாகிஸ்தான் "கண்ணாடியில் தன்னைப் பார்க்க வேண்டும்" என்று எச்சரித்தார். இந்த பேச்சு, சர்வதேச சமூகத்தில் இந்தியாவின் 'சுயபாதுகாப்பு உரிமை'யை வலியுறுத்தி, பாகிஸ்தானின் இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்தியது.
நிஷிகாந்த் துபே தனது பேச்சில், கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை சுட்டிக் காட்டினார். பாகிஸ்தானால் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலில், 26 அப்பாவி பொதுமக்கள் (பெண்கள், குழந்தைகள் உட்பட) உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: உலக பயங்கரவாத மையம் பாக்.,! பெயரை சொல்லாமலே பொளந்து கட்டிய ஜெய்சங்கர்!
"சர்வதேச சமூகம் இந்த கொடுமையை மறக்கவில்லை" என்று துபே வலியுறுத்தினார். ஐநா பாதுகாப்பு சபை, 'தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்' (TRF) என்ற பயங்கரவாத அமைப்பை இத்தாக்குதலுக்கு பொறுப்பானவர்களாக அடையாளம் கண்டுள்ளது. இது பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்படுவதாக இந்தியா குற்றம் சாட்டுகிறது.
இத்தாக்குதலுக்கு பதிலாக, மே 2025இல் இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்'வை துபே "சமநிலையான மற்றும் சரியான பதிலடி" என்று புகழ்ந்தார். இதில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் (PoJK) பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களில் துல்லிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

"பயங்கரவாதத்திற்கு எதிராக மக்களைப் பாதுகாக்கவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும் இந்தியா தனது உரிமையைப் பயன்படுத்தியது" என்று அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கை, பொதுமக்கள் பாதிப்பின்றி துல்லியமாக நடத்தப்பட்டதாகவும், இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்புகளின் திறனை வெளிப்படுத்தியதாகவும் கூறினார்.
பாகிஸ்தானின் எல்லை கிராமங்களை வேண்டுமென்றே குறிவைத்து தாக்குதல் நடத்தியதை துபே விமர்சித்தார். இதில் குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஐநா செயலாளர் பொது 2025 அறிக்கையை மேற்கோள் காட்டி, பாகிஸ்தான் CAAC அஜெண்டாவின் மிக மோசமான மீறல் செய்பவர் என்று குற்றம் சாட்டினார்.
"பாகிஸ்தான் தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வேண்டும். ஐநா மேடையில் பிரசாரம் செய்வதை நிறுத்தி, தனது எல்லைக்குள் உள்ள குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் வான்வழித் தாக்குதல்களில் ஏராளமான ஆப்கான் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் இந்த பேச்சு, ஐநா கூட்டத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் 'பயங்கரவாதத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' கொள்கையை வலியுறுத்தியது. துபே, "இந்தியாவின் குழந்தைகள் நலன் முன்னெடுப்புகளை ஐநா அங்கீகரித்ததற்கு நன்றி" என்றும் கூறினார்.
பாகிஸ்தான் இன்னும் இதற்கு அதிகாரப்பூர்வ பதில் அளிக்கவில்லை. இந்த சம்பவம், இந்திய-பாகிஸ்தான் உறவுகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் இந்த கடுமையான நிலைப்பாடு, சர்வதேச அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை வலுப்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: நெதன்யாகு உரை! வெறிச்சோடிய சபை! ஐ.நாவில் அசிங்கப்பட்ட இஸ்ரேல்! தேவையா இது?!