வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் மற்றும் ஈரான்-அமெரிக்கா இடையேயான நேரடி மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், இந்தியாவின் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) ஏற்றிச் செல்லும் 'கிரீன் ஆஷா' (Green Asha) என்ற கப்பல் இன்று வெற்றிகரமாக ஹார்முஸ் ஜலசந்தியைக் (Strait of Hormuz) கடந்தது.
இந்தியக் கொடியுடன் (India-flagged) பயணிக்கும் 'கிரீன் ஆஷா' கப்பல், சுமார் 20,000 டன் எல்பிஜி எரிவாயுவை ஏற்றிச் செல்வதாகத் வர்த்தகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மதியம் 12:30 மணி நிலவரப்படி, இந்தக் கப்பல் ஈரானின் லாரக், கெஷ்ம் மற்றும் ஹார்முஸ் தீவுகளுக்கு இடைப்பட்ட ஈரானிய கடல் பகுதியில் பாதுகாப்பாகப் பயணித்துக் கொண்டிருந்தது.
மேற்கு ஆசியாவில் போர் தொடங்கிய பிறகு, ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் எட்டாவது இந்தியக் கப்பல் இதுவாகும். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மார்ச் தொடக்கத்தில் இருந்து இதுவரை இந்த ஜலசந்தியைக் கடந்த எட்டு இந்தியக் கப்பல்களுமே எல்பிஜி (LPG) ஏற்றிச் செல்லும் டேங்கர் கப்பல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடுக்கடலில் இந்திய கடற்படை அதிரடி! ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய எரிவாயு கப்பல்கள்!

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஹார்முஸ் ஜலசந்தி மிக முக்கியமான வழித்தடமாகும். தற்போது ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் மோதலால், இந்த ஜலசந்தியை மூடிவிடுவோம் என ஈரான் மிரட்டல் விடுத்துள்ள சூழலில், இந்தியக் கப்பல்கள் அங்குக் தடையின்றிப் பயணிப்பது இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பிற்கு (Energy Security) மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் மற்றொரு இந்தியக் கப்பல் இந்தத் தடையைத் தாண்டிப் பயணித்தது. அதனைத் தொடர்ந்து 'கிரீன் ஆஷா' கப்பலும் வெற்றிகரமாகப் பயணிப்பது, இந்தியாவிற்கான எரிவாயு விநியோகத்தில் தற்போதைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. இருப்பினும், இப்பகுதியில் நிலவும் ராணுவ நடமாட்டங்களை இந்தியக் கடற்படை கூர்ந்து கவனித்து வருகிறது.
இதையும் படிங்க: வழிவிட்ட ஹார்முஸ் ஜலசந்தி..!! இந்தியா வரும் மேலும் 20 எரிபொருள் கப்பல்கள்..!! பெரும் நிவாரணம்..!!