புதுடில்லி: இந்திய ரயில்வேயின் மின்சாரமயமாக்கல் முயற்சிகள் பெரும் வெற்றி பெற்றுள்ளன. டீசல் இன்ஜின்களில் இருந்து மின்சார இன்ஜின்களுக்கு ரயில்களை மாற்றியதன் மூலம் ரயில்வே துறை 6,000 கோடி ரூபாய் அளவுக்கு செலவு சேமித்துள்ளது என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் லோக்சபாவில் தெரிவித்தார்.
லோக்சபாவில் 2026-27 நிதியாண்டுக்கான ரயில்வே அமைச்சகத்தின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பதிலளித்த அவர், "ரயில் போக்குவரத்து நமது நாட்டின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று. உலகின் இரண்டாவது மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து நிறுவனமாக இந்திய ரயில்வே உருவெடுத்துள்ளது. டீசலில் இருந்து மின்சக்திக்கு மாறியதால் 6,000 கோடி ரூபாய் சேமிப்பு ஏற்பட்டுள்ளது" என்று கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு 35,000 கிலோமீட்டர் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 27,000 கிலோமீட்டர் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. ரயில்வேயின் மொத்த செலவுகளில் ஊழியர்களுக்கான ஊதியமே முதலிடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் டிக்கெட்டுக்கு மட்டுமா காப்பீடு? பாகுபாடு கூடாது! ரயில்வே நிர்வாகத்துக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை!

அதற்கு அடுத்தபடியாக எரிசக்தி செலவு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. எதிர்காலத்தில் டீசல் இன்ஜின்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு, முழுமையாக மின்சார ரயில்களே இயக்கப்படும் என்று அவர் விளக்கினார்.
2014-ல் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 'வாக்கு அரசியல்'க்கு பதிலாக 'செயல்திறன் அரசியல்' (politics of performance) முன்னுரிமை அளிக்கப்பட்டது. ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்த முடிவு தொலைநோக்கு சிந்தனையின் விளைவு. இதனால் ரயில்வேக்கான நிதி ஒதுக்கீடு கணிசமாக அதிகரித்துள்ளது.
முன்பு இல்லாத அளவுக்கு ஆண்டு முழுவதும் புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. புதிய திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. ரயில்வேயின் நிதி நிலை வலுப்பெற்றுள்ளது. கணக்கு விவரங்களை வெளியிடுவதில் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது என்று அமைச்சர் வைஷ்ணவ் பெருமிதம் தெரிவித்தார்.
இந்த விவாதத்தில் 210 எம்பிக்கள் கலந்து கொண்டனர். விவாதத்தின் இறுதியில் 2026-27 நிதியாண்டுக்கான ரயில்வே மானியக் கோரிக்கைகள் லோக்சபாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மின்சாரமயமாக்கல் மூலம் எரிசக்தி செலவு குறைவதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. இது இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கலுக்கு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: பாக்ஸ் சிலிகா கூட்டமைப்பில் இணைந்தாச்சு!! பொருளாதார பாதுகாப்பு உறுதி! இந்தியா - அமெரிக்கா பிரதிநிதிகள் கையெழுத்து!