கர்நாடகாவைச் சேர்ந்த 22 வயது இந்திய மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசையா கடந்த நான்கு நாட்களாக அமெரிக்காவில் காணாமல் போயுள்ளார். இது குறித்து அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் பெரும் கவலையில் உள்ளனர்.
சென்னை ஐஐடியில் இளங்கலைப் பட்டம் முடித்த இவர், மேற்படிப்புக்காக கலிபோர்னியாவின் புகழ்பெற்ற பெர்க்லே பல்கலைக்கழகத்தில் (UC Berkeley) வேதியியல் மற்றும் பயோ மாலிகுலர் பொறியியல் (Chemical & Biomolecular Engineering) துறையில் படித்து வந்தார்.
புதிய தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டிருந்த அவர், தனது படிப்பை மிகுந்த உற்சாகத்துடன் தொடர்ந்து வந்தார்.
இதையும் படிங்க: குழந்தைங்க எக்ஸாம்ஸ் முடிஞ்சதுமே இத பண்ணுங்க!! பெற்றோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!
கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் சாகேத் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் தொடர்பு கொள்ள முயன்றும் எந்த பதிலும் வரவில்லை. இதனால் அவரது நண்பர்கள் உடனடியாக உள்ளூர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
கலிபோர்னியா போலீசார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். கடைசியாக சாகேத் பெர்க்லேயின் திவிட் வே (Dwight Way) பகுதியில் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டுள்ளது. துணைத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், "பட்டமேற்படிப்பு படித்து வந்த இந்திய மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசையா காணாமல் போனது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்தினருடனும், உள்ளூர் அதிகாரிகளுடனும் தொடர்பில் இருந்து மாணவரை கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாகேத் ஸ்ரீனிவாசையா தனது குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமானவர். அவரது தந்தை ஸ்ரீனிவாசையா பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். குடும்பத்தினர் சமூக வலைதளங்களில் தகவல் பரப்பி உதவி கோரியுள்ளனர்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வியை எழுப்பியுள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். சாகேத் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்திய தூதரகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் இணைந்து தீவிரமாக தேடுதலை மேற்கொண்டு வருகின்றனர். சாகேத் விரைவில் குடும்பத்துடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தொகுதி வாரியாக முதல்வர் மருமகன் அட்ராசிட்டி! திமுகவில் சலசலப்பு!! சபரீசன் பஞ்சாயத்தால் நிர்வாகிகள் கலக்கம்!