மத்திய அரசு, ஆன்லைன் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக "ஆன்லைன் விளையாட்டுகளை ஊக்குவித்தல் மற்றும் முறைப்படுத்துதல் மசோதா, 2025" (The Promotion and Regulation of Online Gaming Bill, 2025) எனும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா மக்களவையில் கடந்த மாதம் 20ம் தேதி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிமுகப்படுத்திய பின்னர் மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இதற்கு ஒப்புதல் அளித்ததையடுத்து, இது சட்டமாக நடைமுறைக்கு வர உள்ளது.

இந்த மசோதா, பணம் வைத்து விளையாடப்படும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பதோடு, பரிவர்த்தனைகளை மேற்கொள்பவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்கிறது. ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்துவது, பிரபலங்களால் புரோமோட் செய்யப்படுவது உள்ளிட்டவற்றையும் இது தடை செய்கிறது. இளைஞர்களைப் பாதுகாக்கவும், பணமோசடி மற்றும் தீவிரவாத நிதியளிப்பு போன்றவற்றைத் தடுக்கவும் இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: வேலைக்கு வரலனா வேறு ஆட்களை பணியமர்த்துவோம்... ஐகோர்ட்டில் தனியார் நிறுவனம் திட்டவட்டம்!
இந்நிலையில் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் கேமிங் தளமான மொபைல் பிரீமியர் லீக் (MPL) நிறுவனம், இந்திய அரசின் புதிய சட்டத்தால் தங்கள் உள்நாட்டு ஊழியர்களில் சுமார் 60% பேரை, அதாவது 500 ஊழியர்களில் 300 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு, ஆன்லைன் பணம் செலுத்தி விளையாடப்படும் கேம்களை தடை செய்யும் மத்திய அரசின் புதிய சட்டத்தை அடுத்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம், இளைஞர்களிடையே நிதி இழப்பு மற்றும் கேமிங் அடிமையாதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பேண்டஸி கிரிக்கெட், ரம்மி, போக்கர் போன்ற பணம் செலுத்தி விளையாடப்படும் கேம்களை தடை செய்கிறது. இதனால், MPL உள்ளிட்ட பல கேமிங் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, MPL நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாய் ஸ்ரீனிவாஸ், ஞாயிற்றுக்கிழமை அனுப்பிய உள் மின்னஞ்சலில், "கனமான இதயத்துடன், இந்திய குழுவை கணிசமாக குறைக்க முடிவு செய்துள்ளோம்" என்று குறிப்பிட்டார். MPL-இன் வருவாயில் 50% இந்தியாவால் வழங்கப்பட்டது, மேலும் இந்த மாற்றம் எதிர்காலத்தில் நாங்கள் இந்தியாவிலிருந்து எந்த வருவாயையும் ஈட்ட மாட்டோம் என்று அர்த்தம் என்று அவர் மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார். இந்த பணிநீக்கம் மார்க்கெட்டிங், நிதி, இயக்கம், பொறியியல் மற்றும் சட்டத் துறைகளை பாதிக்கும்.
இந்தியாவில் MPL நிறுவனத்தின் வருவாய், கடந்த ஆண்டு சுமார் 100 மில்லியன் டாலராக இருந்தது, இது நிறுவனத்தின் மொத்த வருவாயில் 50% ஆகும். ஆனால், புதிய தடையால் இந்தியாவில் வருவாய் ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. MPL நிறுவனம், இப்போது இலவச கேம்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அமெரிக்க சந்தையில் தனது வணிகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனம், 2021இல் 2.3 பில்லியன் டாலர் மதிப்பீட்டில், பீக் XV பார்ட்னர்ஸ் (முன்னர் செகோயா கேபிடல் இந்தியா) ஆதரவு பெற்றது. இந்தியாவின் கேமிங் துறையில், 2029ஆம் ஆண்டுக்குள் 3.6 பில்லியன் டாலர் மதிப்பை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தடை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. MPL மற்றும் ட்ரீம்11 நிறுவனங்கள் சட்டரீதியான எதிர்ப்பை தவிர்த்துள்ளன, ஆனால் A23 நிறுவனம் இந்த தடையை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது.

இந்த முடிவு, ஆன்லைன் கேமிங் துறையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்தையும், அதன் காரணமாக லட்சக்கணக்கானோருக்கு ஏற்பட்டுள்ள வேலை இழப்பு அச்சுறுத்தலையும் எடுத்துக்காட்டுகிறது. அரசின் புதிய கட்டுப்பாடுகள், எதிர்காலத்தில் இந்தத் துறையின் வளர்ச்சிக்கு எந்த மாதிரியான பாதையை அமைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: அமித்ஷா பத்தி நான் அப்படி பேசவே இல்லை!! எதிர்ப்பு வந்ததும் ஜகா வாங்கும் மஹூவா மொய்த்ரா!!