புதுடெல்லி: நாட்டை உலுக்கிய பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா உரிய பதிலடி கொடுத்தது போல், பாகிஸ்தானின் பஹவல்பூர், முரிட்கே, சியால்கோட் உள்ளிட்ட 9 இடங்களில் துல்லியமான குண்டு வீச்சு நடத்தி, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளின் தலைமையகம் உட்பட பல முகாம்களை தரைமட்டமாக்கியது. இதில் 80-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆனால், இந்த ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் தங்கள் திட்டங்களை நிறுத்தவில்லை. நவம்பர் 10-ம் தேதி டில்லியில் நடந்த பயங்கரமான கார் குண்டுவெடிப்பில் 15 பேர் கொல்லப்பட்டனர். என்ஐஏ விசாரணையில் இது தற்கொலைப் படை தாக்குதல் என்பதும், பின்னணியில் ஜெய்ஷ்-இ-முகமது இருப்பதும் உறுதியானது.
உளவுத்துறை முன்னதாகவே எச்சரித்திருந்தது போல், நம் நாட்டில் அடுத்தடுத்து பல தாக்குதல்கள் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் தீவிரமாக திட்டமிட்டிருந்தன. இந்நிலையில், பாகிஸ்தானின் பஹவல்பூரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையிடம் செயல்படும் பகுதியில், பயங்கரவாதிகள் பெரிய கூட்டத்தை நடத்தி இந்தியாவை தாக்குவது குறித்து ஆலோசனை நடத்தியதாக இந்திய உளவுத்துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: துருக்கி பயங்கரவாதியை சந்தித்த உமர்!! சதித்திட்டம் அம்பலம்! என்.ஐ.ஏ விசாரணையில் பகீர்!
இந்த கூட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணைத் தளபதி சைபுல்லா கசூரி உட்பட மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் பங்கேற்று, இணைந்து திட்டங்களை வகுத்துள்ளனர்.
ராவல்கோட்டில் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ தாக்குதலின் போது அழிக்கப்பட்ட இடத்தில், மீண்டும் கட்டுமானப் பணிகள் நடந்து வரும் சூழலில் இந்தக் கூட்டம் நடைபெற்றது என்பது கூடுதல் கவலையை ஏற்படுத்துகிறது. டில்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலைத் தொடர்ந்து, நம் நாட்டில் புதிதாக தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவது குறித்தும், இதற்கான விரிவான திட்டங்களை அவர்கள் ஆலோசித்ததாக உளவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் ராணுவத்தின் நேரடி உதவியுடன், ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து புதிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளன.

மிக முக்கியமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பீம்பர்-பர்னாலா பகுதி, தற்கொலைப் படை தாக்குதல்களுக்கான பயிற்சி மையமாக மாறி வருகிறது. அங்கிருந்து சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்தும் பஹவல்பூர் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக மூத்த உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு கடந்த செப்டம்பர் மாதம் முதல், நம் எல்லைகளின் வழியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அதிக அளவில் ஊடுருவி வருவதாகவும், இதனால் நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டியுள்ளது.
இந்திய உளவுத்துறை தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளது. பாகிஸ்தான் ஆதரவுடன் இத்தகைய சதிகள் தொடர்ந்தால், இந்தியா உரிய நடவடிக்கை எடுக்கும் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது. டெல்லி தாக்குதலில் கொல்லப்பட்டோரின் குடும்பங்கள் இன்னும் துயரத்தில் மூழ்கியுள்ள நேரத்தில், இந்தப் புதிய தகவல்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை என்பதை இது உணர்த்துகிறது.
இதையும் படிங்க: இந்தியாவை பாகிஸ்தானுடன் ஒப்பிடாதீங்க!! எங்களுக்கு விதிகள், நெறிமுறைகள் இருக்கு! ஜெய்சங்கர் ஆவேசம்!