அமெரிக்கா-ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்றம் உலக எண்ணெய் வர்த்தகத்தை பெரிதும் பாதித்துள்ளது. உலகின் மிக முக்கியமான கடல் எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதாக அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த குறுகிய நீரிணை வழியாக உலக கடல் மார்க்க கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 20 சதவீதம் போக்குவரத்து நடைபெறுகிறது.
இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய்யில் மட்டும் சுமார் 80 சதவீதம் இந்த வழியாகவே இறக்குமதி செய்யப்படுகிறது. ஈரானின் அணு திட்டங்கள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக ஈரான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதனால் சவுதி அரேபியா, ஈராக், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்லும் எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. கப்பல் போக்குவரத்து செலவுகள், காப்பீட்டு கட்டணங்கள் உயர்ந்துள்ளன. உலகளாவிய சப்ளை செயின் பாதிக்கப்பட்டு, தொழிற்துறை உற்பத்தி, விமானப் போக்குவரத்து, மின்சார உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "இனி நல்லவனாக இருக்க மாட்டேன்": துப்பாக்கியுடன் புகைப்படம் பகிர்ந்து ஈரானுக்கு அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!
இந்தியாவில் இதுவரை நேரடி பாதிப்பு குறைவாக இருந்தாலும், வணிக கியாஸ் மற்றும் விமான எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் மத்தியில் விலைவாசி உயர்வு அழுத்தம் அதிகரித்துள்ளது. அரபு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ளதால் உள்நாட்டு சுத்திகரிப்பு நிலையங்கள் சவாலை எதிர்கொள்கின்றன.
இந்நிலையில், குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட சுத்திகரிப்பு வளாகத்தில் ஒரு முக்கிய பிரிவு தற்காலிகமாக மூடப்பட உள்ளது. நாளொன்றுக்கு 6,60,000 பீப்பாய் திறன் கொண்ட இந்தப் பிரிவு, நாட்டின் உள்நாட்டு பெட்ரோல் மற்றும் டீசல் தேவையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை வழக்கமாக மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த மூடல் நடைபெறவுள்ளது.

நடப்பு மாதத்தின் இரண்டாவது பாதியில் பணிகள் தொடங்கி சுமார் நான்கு வாரங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா கூறியதாவது: “ரிலையன்ஸ் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதால் நாட்டில் பெட்ரோல், டீசல் அல்லது கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் போதிய அளவு எரிபொருள் கையிருப்பை வைத்துள்ளன.
அதே வளாகத்தில் 7,04,000 பீப்பாய் திறன் கொண்ட மற்றொரு சுத்திகரிப்பு நிலையம் வழக்கம் போல் இயங்கும். எனவே ஏற்றுமதியும் பாதிக்கப்படாது” என்றார். உலக அரங்கில் பதற்றம் தொடரும் நிலையில், இந்திய அரசு மாற்று எண்ணெய் ஆதாரங்களை தேடுவதுடன், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நீண்டகால திட்டங்கள் அவசியம் என வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு தவெகவுக்கே உள்ளது! கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வந்த ஆதரவுக் குரல்!