கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நாட்டு வெடிகுண்டு மூலம் அட்டவணை பிரிவைச் சேர்ந்த அரிய வகை கடமானை கொடூரமாக வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் அன்பழகன் தலைமையில் வனத்துறையினர் தெற்குமலை காப்புக் காடு அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோட்டக்கரை காப்பு நிலப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் வனவிலங்கு வேட்டையாடப்பட்டதற்கான தடயங்கள் தென்பட்டன. வனத்துறையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தியபோது, வெடிபொருளான அவுட்டுக்காய் மூலம் வேட்டையாடப்பட்ட அரிய வகை கடமானின் தலை, கால்கள் மற்றும் குடல் உள்ளிட்ட உடல் பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட வன அலுவலரின் நேரடி உத்தரவின் பேரில் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை வலைவீசித் தேடினர். அறிவியல் ஆதாரங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில், இக்கொடூர வேட்டையில் ஈடுபட்ட காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்த ஆல்வின் (30) மற்றும் ரமேஷ் ஆகிய இரு நபர்களை வனப்பணியாளர்கள் சுற்றிவளைத்துக் கைது செய்தனர்.
இதையும் படிங்க: கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம்: விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!
கைது செய்யப்பட்ட இருவரும் நாகர்கோவிலில் உள்ள வன வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். குமரி மாவட்ட வனப்பகுதிகளில் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் காட்டுத் தீ தடுப்புப் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும், வனவிலங்குகளை வேட்டையாடுவது உள்ளிட்ட வனக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் எனவும் வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: 3 தமிழர்கள் சுட்டுக்கொலை! கர்நாடக வனத்துறையை கண்டித்து சென்னையில் சிபிஐ ஆர்ப்பாட்டம்!