ஜெனீவா: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலின் 62வது கூட்டத்தில் இந்தியா பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி கொடுத்துள்ளது. இந்தியத் தூதர் அனுபமா சிங் பேசுகையில், “பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடு நல்லெண்ணம் மற்றும் நட்பின் அடிப்படையிலான ஒப்பந்தங்களின் சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் இப்போது காலாவதியாகிவிட்டது” என திட்டவட்டமாக அறிவித்தார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதற்கு உடனடியாக பதிலளித்த அனுபமா சிங், பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதாகவும், சர்வதேச மன்றங்களில் இருதரப்பு பிரச்சினைகளை எழுப்பி வருவதாகவும் கடுமையாக விமர்சித்தார். “பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடு, 1960 சிந்து நீர் ஒப்பந்தத்தின் பலன்களை எதிர்பார்ப்பது முரணானது” என அவர் தெரிவித்தார்.

1960ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையே நதிநீர் பகிர்வை ஒழுங்குபடுத்தியது. ஆனால், சமீபத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகளை கொன்ற கொடூர சம்பவத்துக்குப் பிறகு இந்த ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இப்போது ஐநா மன்றத்தில் இந்தியா அதை முழுமையாக காலாவதியாக்கியதாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: பொய் பேசுற இடமா இது! பதவியை தப்பா யூஸ் பண்ணாதீங்க! ஐ.நாவில் பாகிஸ்தானை பொளந்து கட்டிய இந்தியா!
இந்தியாவின் இந்த உறுதியான நிலைப்பாடு சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்தை ஆதரிப்பதால், எந்த நல்லெண்ண ஒப்பந்தமும் செயல்பட முடியாது என்பதை இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் இந்தியா-பாகிஸ்தான் உறவில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் இந்த அறிவிப்பு உள்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பாதுகாப்பு வட்டாரங்கள் இதை வரவேற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளும் இந்தியாவின் உறுதியான அணுகுமுறையை பாராட்டியுள்ளன. சிந்து நீர் ஒப்பந்தம் காலாவதியானதால், இனி நதிநீர் தொடர்பான முடிவுகளை இந்தியா தனது தேசிய நலன் அடிப்படையில் எடுக்க முடியும் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தவெகவில் ஐக்கியமா..? பட்டென போட்டுடைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ..!!