ஈரான் நாட்டில் உச்சபட்ச தலைவராக அயோதுல்லா அலி காமேனி தொடர்ந்து பொறுப்பில் இருந்து வருகிறார். அந்நாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது. பணவீக்கத்தின் அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் பொருளாதார தேக்கநிலை போன்ற பிரச்சினைகளால் மக்களிடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக, அரசுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் பரவி, தீவிரமடைந்துள்ளன. பல்வேறு மாகாணங்கள் மற்றும் நகரங்களில் மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தொடங்கி இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இன்றும் பல இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: "வாக்குறுதி என்னாச்சு? திமுக-வுக்கு பி.ஆர். பாண்டியன் கேள்வி!" பிப்ரவரியில் டெல்டா விவசாயிகள் போராட்டம்!
அரசு, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு படைகளை களமிறக்கியுள்ளது. இதனால், போராட்டத்தில் பங்கேற்பவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஈரானின் 31 மாகாணங்களில் குறைந்தது 100 நகரங்களில் போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த சூழலில், நாட்டின் பல பகுதிகளில் இணையதள சேவைகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, ஈரானில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து வெளியுலகிற்கு சரியான தகவல்கள் கிடைப்பதில்லை. செய்தி ஊடகங்களும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு கட்டுப்பாட்டில் உள்ள சில ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்த போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறையில், குறைந்தது 116 பேர் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மனித உரிமைகள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த போராட்டங்களின் பின்னணியில், ஈரானின் பொருளாதார நெருக்கடி முக்கிய காரணமாக உள்ளது. பணவீக்க விகிதம் உயர்ந்து கொண்டிருப்பதால், அன்றாட வாழ்க்கை செலவுகள் பெரும் சுமையாக மாறியுள்ளன. அத்தியாவசிய பொருட்களான உணவு, எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலை உயர்வு மக்களை விரக்தியடையச் செய்துள்ளது.
அரசின் கொள்கைகள் இந்த பிரச்சினைகளை தீர்க்கத் தவறியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. போராட்டக்காரர்கள் அரசு மாற்றம், சுதந்திரம் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை கோரி குரல் கொடுத்து வருகின்றனர். அரசு படைகளின் அடக்குமுறை நடவடிக்கைகள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

உலக அரங்கில் இந்த போராட்டங்கள் கவனம் ஈர்த்துள்ளன. சர்வதேச அமைப்புகள் ஈரான் அரசை கட்டுப்பாட்டுடன் நடக்குமாறு வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், இணைய முடக்கம் காரணமாக உண்மை நிலவரம் முழுமையாக தெரிய வரவில்லை. மனித உரிமை அமைப்புகள் இந்த சம்பவங்களை கண்காணித்து வருகின்றன. ஈரான் அரசு போராட்டங்களை கட்டுப்படுத்த முயற்சித்தாலும், மக்களின் அதிருப்தி தொடர்ந்து வெளிப்படுகிறது. இந்த நிலைமை எப்போது சீராகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இதையும் படிங்க: "நோ ஒர்க் - நோ பே!" போராடும் ஆசிரியர்களுக்குத் தமிழக அரசு கடும் எச்சரிக்கை!