விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி மாதம் கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை பிரம்மாண்ட யாத்திரை நடத்தப்பட உள்ளதாகத் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் அறிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற ‘சம்யுக்தா கிசான் மோர்ச்சா’ (SKM) அமைப்பின் தேசிய உயர்மட்டக் குழு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வஞ்சித்து வருவதாகக் கடுமையாகச் சாடினார். குறிப்பாக, குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) தொடர்பான பேச்சுவார்த்தைகளை முடக்கி வைத்துள்ள மத்திய அரசுக்கும், தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்ட திமுக அரசுக்கும் எதிராகத் தங்களது போராட்டக் களம் அமையும் என அவர் எச்சரித்தார்.
"விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி நீண்டகாலமாகப் போராடி வருகிறோம். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய நான்காம் கட்டப் பேச்சுவார்த்தையை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கோரிக்கையின் பேரில் ஒத்திவைத்தோம். ஆனால், இதுவரை அந்தக்கூட்டம் நடத்தப்படவில்லை. இதனை வலியுறுத்தியே பிப்ரவரி மாதம் காஷ்மீர் வரை யாத்திரை மேற்கொள்கிறோம்; இதில் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநர்களைச் சந்தித்து ஆதரவு கோர உள்ளோம்" என பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "நோ ஒர்க் - நோ பே!" போராடும் ஆசிரியர்களுக்குத் தமிழக அரசு கடும் எச்சரிக்கை!
தமிழக அரசியல் சூழல் குறித்துப் பேசிய அவர், திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார். "கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 மற்றும் கரும்பு டன்னுக்கு ரூ. 5,000 வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. அதனை அன்று அமல்படுத்தியிருந்தால் இன்று விவசாயிகளுக்கு ரூ. 3,100 கிடைத்திருக்கும். ஆனால், திமுக அரசு விவசாயிகளைப் பச்சையாக ஏமாற்றிவிட்டது. கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட எவ்வித வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. சொன்ன திட்டங்களை விட்டுவிட்டு, நீர்நிலைகளையும் விலை நிலங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் வேலையைத் தான் திமுக அரசு செய்கிறது. தற்போது தேர்தல் வருவதால் மீண்டும் பரிந்துரைகளைக் கேட்கிறார்கள்; ஆனால் தமிழக விவசாயிகளுக்கு திமுக மீது துளியும் நம்பிக்கை இல்லை. விவசாயிகளுக்கு விரோதமான இந்த ஆட்சியை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம்" என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "ஈரான் பயணம் இப்போதைக்கு வேணாம்!" இந்தியர்களுக்கு மத்திய அரசு அவசர எச்சரிக்கை!