கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெற்ற தவெக கூட்டத்தின் போது, பாதுகாப்புப் பணியில் இருந்த ஈஷா சிங், அனுமதிச் சீட்டு (Pass) இல்லாமல் உள்ளே நுழைய முயன்றவர்களைத் தடுத்து நிறுத்தினார். அப்போது தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்திடமே மைக்கைப் பிடுங்கி, “கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது நினைவில்லையா?” எனக் கேள்வி எழுப்பிக் கண்டித்தது சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது இந்தத் துணிச்சலான செயலுக்காகப் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவரை நேரில் அழைத்துச் சால்வை அணிவித்துப் பாராட்டினார். இந்நிலையில், மத்திய அரசின் உத்தரவின்படி அவர் தற்போது டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது அரசியல் மற்றும் காவல் துறை வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
2021-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்சைச் சேர்ந்த ஈஷா சிங், மகாராஷ்டிர மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். முதலில் வழக்கறிஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், பின்னர் தனது தந்தை ஒய்.பி. சிங்கின் வழியைப் பின்பற்றி ஐபிஎஸ் அதிகாரியானார். புதுச்சேரியில் லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்பி-யாகப் பணியமர்த்தப்பட்ட இவர், தேங்கிக் கிடந்த முக்கிய வழக்குகளைத் துரிதப்படுத்தியதன் மூலம் மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்றார். அவரது அதிரடி நடவடிக்கைகளைக் கௌரவிக்கும் விதமாக அண்மையில் அவர் சீனியர் எஸ்பி (SSP) ஆகப் பதவி உயர்வு பெற்றார்.
மத்திய அரசின் சார்புச் செயலாளர் ராகேஷ்குமார் சிங் வெளியிட்டுள்ள உத்தரவில், ஈஷா சிங்குடன் சேர்த்து புதுச்சேரி ஐஜி அஜித்குமார் சிங்களா மற்றும் ஐஏஎஸ் அதிகாரி பத்மா ஜெய்ஸ்வால் ஆகியோரும் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இது ஒரு வழக்கமான இடமாற்றம் என்று ஒருபுறம் கூறப்பட்டாலும், தவெக கூட்டத்தில் அவர் காட்டிய அதிரடிக்குப் பிறகு இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதால் இது பேசுபொருளாகியுள்ளது. நள்ளிரவில் ரோந்து செல்வது, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிவது எனப் புதுச்சேரியில் ‘லேடி சிங்கம்’ எனப் புகழ்பெற்ற ஈஷா சிங்கின் இடமாற்றம், புதுவை மக்களிடையே ஒருவித ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் அவருக்குக் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: “பொங்கல் வரை பொறுத்திருங்கள்!” – தவெக-வில் இணையப்போகும் முக்கியப் புள்ளிகள் யார்? செங்கோட்டையன் சூசகம்!
இதையும் படிங்க: நிதி நெருக்கடியை சமாளிக்க.. தவெக வேட்பாளர்களுக்கு விஜய் வழங்கும் விட்டமின் "M"..!!