ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். இதை அடுத்து பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவும் உள்ளூர் பயங்கரவாதிகள், உளவாளிகளை கண்டறிந்து களை எடுக்கும் பணியில் இந்தியா அதிரடி காட்டி வருகிறது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் போன்ற இந்தியாவின் பதிலடியால் பாகிஸ்தான் அச்சமடைந்துள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து 8 நாட்களாக எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது.
பாகிஸ்தான் இராணுவம் இரவில் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அப்பால் இருந்து எந்தவித தூண்டுதலும் இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையில், நாடு தழுவிய தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதற்கிடையில், ராஜஸ்தானில் உள்ள உளவுத்துறை அமைப்புகள் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யின் உளவாளி ஒருவரை கைது செய்துள்ளன.

ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் மாவட்டத்தை சேர்ந்தவர் பதான் கான். வயது 40. இவரது உறவினர்கள் பலர் பாகிஸ்தானில் வசிக்கின்றனர். இந்த நிலையில் பதான் கான் கடந்த 2019 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்று உள்ளார். அங்கு உறவினர்களை சந்தித்தது மட்டும் அல்லாமல், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ உளவுத்துறை அதிகாரிகளுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தி உள்ளார். அதன் மூலம் அவர்களிடம் பணம் பெற்று இந்தியாவின் ராணுவ ரகசியங்களை அவர் ஐ.எஸ்.ஐ அமைப்பிற்கு விற்றதாக கூறப்படுகிறது. பதான் கான் அந்த பயணத்திற்கு பிறகும் பல முறை பாகிஸ்தானுக்கு பயணம் செய்து உள்ளார்.
இதையும் படிங்க: எல்லையில் தினமும் துப்பாக்கிச்சூடு.. 4 வது நாளாக தொடரும் பதற்றம்.. இந்தியா பதிலடி தீவிரம்..!

அவர், இந்திய எல்லைப் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, ஜெய்ப்பூரில் அவர்மீது 1923ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. பதான் கான் நீண்ட காலமாக பாகிஸ்தான் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ஒரு மாதத்திற்கு முன்பு கூட அவர் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டார். விசாரணையின் போது, அவரது நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக இருப்பது கண்டறியப்பட்டது.
இதன் பின்னர், அவர் ஜெய்ப்பூரில் உள்ள மத்திய புலனாய்வு மையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார். அப்போது அவர் ஐஎஸ்ஐ அமைப்பில் பணி புரியும் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் இந்தியாவின் ரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டது தெரியவந்தது. இந்த நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள மத்திய புலனாய்வு மையத்தில் குற்றம் சாட்டப்பட்ட பதான் கானிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ராணுவம் தொடர்பான தகவல்கள் கசிந்ததற்கான வலுவான ஆதாரங்கள் அவரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஜெய்சால்மரின் ஜீரோ ஆர்.டி. பகுதியில் உள்ள மோகன்கர் கிராமத்தைச் சேர்ந்த பதான் கான், ஒரு மாதத்திற்கு முன்னரே சந்தேகத்தின் அடிப்படையில் காவலில் எடுக்கப்பட்டார். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது, அவர் பாகிஸ்தான் உளவுத்துறையுடன் மிக ஆழமான தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. ஆதாரங்களின்படி, பதான் கான் இராணுவத்தின் சில முக்கிய பகுதிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியிருந்தார். விசாரணையின் போது இன்னும் பெரிய தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு வேவு பார்த்து தகவல் அனுப்பியதாக ராஜஸ்தானில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம், நாட்டின் உள்துறை பாதுகாப்பை பாதிக்கும் வகையில் இன்னும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரக்கூடும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவிற்குள் 'ஆப்பிள்' போய்விடக்கூடாது.. பாக்-ஐ ஏவிய சீனா- பஹல்காம் தாக்குதலில் பகீர்..!