பெய்ரூட்: ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்கள் 5வது நாளாக தொடரும் நிலையில், போர் மேற்காசியா முழுவதும் பரவி வருகிறது. ஈரான் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதற்கிடையே, ஈரானுக்கு ஆதரவான லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதால், இஸ்ரேல் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது.
இன்று அதிகாலை லெபனானின் கிழக்கு பகுதியான பால்பெக் (Baalbek) நகரில் உள்ள ஒரு நான்கு மாடி குடியிருப்பு கட்டடத்தின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் கட்டடம் முழுவதும் தகர்ந்து, குடும்பங்கள் சிக்கிய நிலையில் பலர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: அமெரிக்க தூதரகத்தை தேடித்தேடி அழிக்கும் ஈரான்!! துபாய் தூதரகம் மீது ட்ரோன் தாக்குதல்! அதிகரிக்கும் பதற்றம்!
லெபனான் அரசு ஊடகங்கள் (NNA) தெரிவிப்பின்படி, குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர், 6 பேர் காயமடைந்தனர். மீட்புக்குழுக்கள் இன்னும் சிதைந்த கட்டடத்தின் கீழ் இருந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஹிஸ்புல்லா அமைப்பு இதை "புதிய கொடூரம்" என கண்டித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவம் இந்தத் தாக்குதலை ஹிஸ்புல்லாவின் ஏவுகணை அலகுகள், கட்டளை மையங்கள் மீது நடத்தியதாக கூறியுள்ளது. ஹிஸ்புல்லா தரப்பில் பதிலடி ஏவுகணை தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
இது லெபனான்-இஸ்ரேல் எல்லை பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. லெபனான் சுகாதார அமைச்சகம், சமீபத்திய தாக்குதல்களால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஈரான்-அமெரிக்கா பதற்றம் காரணமாக ஓமன் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் அரசு அலுவலகங்களில் அவசரமற்ற பணிகளில் ஈடுபட்ட ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினரை வெளியேற அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.
ஏற்கனவே குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரைன், ஜோர்டான், ஈராக் ஆகிய 6 நாடுகளுக்கு இதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அமெரிக்கா தனது குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்துள்ளது. விமான நிலையங்கள் மூடல், போக்குவரத்து சிரமங்கள் காரணமாக பலர் சிக்கியுள்ளனர்.
போர் நீடித்தால் உலக பொருளாதாரம், எண்ணெய் விலை உயர்வு போன்றவை பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. உலக நாடுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து வருகின்றன.
இதையும் படிங்க: மத்திய கிழக்கில் போர் பதற்றம்!! 9,000 பேர் நாடு திரும்பியாச்சு!! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!!