இந்தியாவின் அதிநவீன நேவிகேஷன் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ஏவிஎஸ்-03 செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி எஃப்-18 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இந்தியாவின் சொந்த ஜிபிஎஸ் தொழில்நுட்பமான நாவிக் (NavIC) சேவையை மேலும் வலுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஏவிஎஸ்-03 செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, 24 மணி நேர கவுண்ட்டவுன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஜிஎஸ்எல்வி எஃப்-18 ராக்கெட் நேற்று இரவு 11.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. 2,232 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளைச் சுமந்துகொண்டு ராக்கெட் விண்ணை நோக்கிப் பாய்ந்தது.
இதையும் படிங்க: இன்று விண்ணில் பாயும் இஸ்ரோவின் NVS-03 செயற்கைக்கோள்! நனவாகிறது இந்தியாவின் GPS கனவு!
இந்த செயற்கைக்கோளில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ரூபிடியம் அணுக் கடிகாரம் மற்றும் மொபைல் போன்களில் நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய எல்1 சிக்னல் வசதியும் இடம்பெற்றுள்ளன.
இந்த செயற்கைக்கோள் மூலம் இந்திய நிலப்பரப்பு மட்டுமின்றி, இந்திய எல்லையைச் சுற்றியுள்ள சுமார் 1,500 கிலோமீட்டர் தொலைவு வரையிலும் மிகத் துல்லியமான இருப்பிடத்தைக் கண்டறியும் மற்றும் வழிகாட்டும் சேவைகளைப் பெற முடியும்.
விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி எஃப்-18 ராக்கெட், செயற்கைக்கோளைத் திட்டமிட்ட புவிவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.
இந்த ஏவுதலின் போது, செயற்கைக்கோளின் செயல்பாடுகள் மற்றும் அதன் சுற்றுப்பாதை தொடர்பான தகவல்கள் நிகழ்நேரத்தில் கண்காணிக்கப்பட்டன. இந்தச் செயற்கைக்கோள் விண்வெளியில் சுமார் 12 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடையின்றிச் செயல்பட்டு சேவைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
என்விஎஸ்-03 செயற்கைக்கோளின் முக்கியப் பங்கு என்ன?
இந்தச் செயற்கைக்கோள் நமது நாட்டின் பாதுகாப்புக்கும், பல்வேறு பயன்பாடுகளுக்கும் உதவியாக இருக்கும். நாம் இருக்கும் இடத்தை அறிந்துகொள்வதற்கும், நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிடுவதற்கும் இது பயன்படும்.
இதனை பிஎன்டி (PNT) சேவை என்று சொல்வோம். அதாவது, பொசிஷனிங், நேவிகேஷன், டைமிங் (Positioning, Navigation, Timing) சேவை.
இந்தச் சேவையை வழங்குவதற்காக இதுவரை மூன்று செயற்கைக்கோள்கள் செயல்பட்டு வருகின்றன. இப்போது நான்காவது செயற்கைக்கோளான என்விஎஸ்-03-ஐ இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது.
இந்த பிஎன்டி சேவை நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் நான்கு செயற்கைக்கோள்கள் தேவை. ஏற்கெனவே மூன்று செயற்கைக்கோள்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தச் செயற்கைக்கோள் அதன் சுற்றுப்பாதையை அடைந்தவுடன் நமக்கு இந்தச் சேவை கிடைக்கும்.
இது பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவும். குறிப்பாக, நமது மக்களின் பாதுகாப்புக்காகவும் பயன்படும். ரயில்களை நிகழ்நேரத்தில் கண்காணிப்பதற்கும், கடலில் செல்லக்கூடிய படகுகள் மற்றும் கப்பல்களைக் கண்காணிப்பதற்கும், வாகனங்களைக் கண்காணிப்பதற்கும் இது உதவும்.
நேரம் மற்றும் இருப்பிடத் தகவல்கள் தேவைப்படும் பல்வேறு துறைகளிலும் இந்தச் செயற்கைக்கோள் பயன்படும். இத்தகைய திறன் உலகில் மூன்று அல்லது நான்கு நாடுகளிடம் மட்டுமே உள்ளது. நமது நாட்டிலும் இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி இருப்பது கூடுதல் சிறப்பு.
இதற்காக மேலும் மூன்று செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த வேண்டியுள்ளது. ஏனெனில், மொத்தம் ஏழு செயற்கைக்கோள்கள் தேவைப்படுகின்றன. அதற்கான திட்டங்களும் உள்ளன.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிடம் இத்தகைய தொழில்நுட்பம் உள்ளது. அதற்கு இணையான தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விண்வெளிக்கு பறக்கும் முதல் ஆளில்லா ராக்கெட் இந்தாண்டுக்குள் அனுப்பப்படும்! இஸ்ரோ தலைவர் உறுதி!