அமெரிக்காவைச் சேர்ந்த ஏஎஸ்டி நிறுவனம் உருவாக்கிய ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) விண்ணில் செலுத்த உள்ளது.
இந்த ஏவுதல் டிசம்பர் 24-ஆம் தேதி காலை 8.54 மணிக்கு ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நடைபெற உள்ளது. எல்விஎம்-3 ராக்கெட் மூலம் இந்தச் செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்படும்.
சுமார் 6,500 கிலோ எடை கொண்ட இந்தச் செயற்கைக்கோள் தொலைதூர கிராமங்களுக்கு மொபைல் போன் இணைப்பு மற்றும் அதிவேக இணைய சேவை வழங்க உதவும். இந்தத் திட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. நாளை (டிசம்பர் 23) காலை கவுன்டவுன் தொடங்க உள்ளது.
இதையும் படிங்க: வேலைவாய்ப்பு, சமூக நீதி..! எல்லோருக்குமான தேர்தல் அறிக்கை வரும்... கனிமொழி MP உறுதி
இந்நிலையில் இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் இன்று (டிசம்பர் 22) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார். திட்டம் வெற்றி பெற வேண்டி அவர் பிரார்த்தனை செய்தார். தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு பிரசாதம் வழங்கினர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், அமெரிக்க செயற்கைக்கோள் ஏவுதல், ககன்யான் திட்டம், சந்திரயான்-4 திட்டம் குறித்து விளக்கினார். சந்திரயான்-4 திட்டம் 2027-இல் முழுமையடையும் என்று அவர் உறுதி அளித்தார்.
இஸ்ரோவின் இந்த ஏவுதல் திட்டம் வெற்றி பெற்றால் இந்தியாவின் விண்வெளி ஆய்வுத் துறையில் மற்றொரு மைல்கல்லாக அமையும். அமெரிக்க நிறுவனத்துடனான இணைப்பு இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்பத்தின் திறனை உலகுக்கு மீண்டும் நிரூபிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தவெகவில் இணையும் செங்கோட்டையன் ஆதரவு MLA? சட்டென கொடுத்த ரியாக்ஷன்..!