இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் (வயது 74), மருத்துவக் காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 14வது குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த தன்கர், திடீரென உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்ததாகவும், இதையடுத்து மருத்துவ ஆலோசனைப்படி பதவியை விட்டு விலகுவதாகவும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இவரது ராஜினாமா உள்துறை அமைச்சகத்தால் ஏற்கப்பட்டுள்ளது.

துணை ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். ஜெகதீப் தன்கர் கடந்த 2022ம் ஆண்டு துணை ஜனாதிபதியானார். இவரது பதவிக்காலம் 2027 ம் ஆண்டு வரை இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாக பொறுப்பேற்ற 3 ஆண்டுகளிலேயே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதையும் படிங்க: ஜெகதீப் தன்கர் ராஜினாமா! அடுத்த துணை ஜனாதிபதி யார்? நியமனம் எப்படி நடக்கும்?
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் 1951 இல் பிறந்த ஜெகதீப் தன்கர், மேற்கு வங்க ஆளுநராக 2019ம் ஆண்டு முதல் 2022 வரை பணியாற்றியவர். முன்னதாக, இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும், மக்களவை உறுப்பினராகவும் (1989-1991) பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவரது பதவிக்காலத்தில், எதிர்க்கட்சிகளுடனான வாக்குவாதங்கள் மற்றும் நீதித்துறை தொடர்பான கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின.
குறிப்பாக, தமிழக அரசின் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கடுமையாக விமர்சித்தது மற்றும் அலகாபாத் நீதிபதி விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் தகுதி நீக்க நோட்டீஸை ஏற்றது, மத்திய அரசுடன் மோதலுக்கு காரணமாக அமைந்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமா, அரசியல் அழுத்தங்கள் மற்றும் மத்திய அரசுடனான கருத்து வேறுபாடுகளால் ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பியுள்ளன. காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “நேற்று பிற்பகல் 1 முதல் 4:30 மணிக்குள் நடந்தது என்ன?” என கேள்வி எழுப்பியுள்ளார். ஜெகதீப் தன்கர் தனது உடல்நிலையை காரணம் காட்டி ராஜினாமா செய்தார் என தகவல் வெளியானாலும், அரசியல் காரணங்களால் அவர் ராஜினாமா செய்துள்ளதாக எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தான் ராஜினாமா செய்வதற்கு முன்பாக ஜெகதீப் தன்கர் மயங்கி விழுந்தது தொடர்பான அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 17 ம் தேதி ஜெகதீப் தன்கர் தனது மனைவி மற்றும் டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா ஆகியோருடன் தோட்டத்திற்கு சென்றார்.
அப்போது அவருக்கு திடீரென உடல்நல பிரச்சனை ஏற்பட்டதால் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். அதன்பிறகு அவர் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளார். மேலும் சமீபகாலமாக ஜெகதீப் தன்கர் உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆஞ்சிபிளாஸ்டி சிகிச்சை பெற்றிருந்தார்.
இதன்மூலம் ஜெகதீப் தன்கர், அரசியல் காரணங்களால் ராஜினாமா செய்யவில்லை, தனது உடல்நிலையை காரணம் காட்டி மட்டுமே அவர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
இதையும் படிங்க: தனது பதவியை ராஜினாமா செய்தார் ஜெகதீப் தன்கர்.. என்ன காரணம்..??