இந்தியாவின் குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களை மேற்கோள்காட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த திடீர் முடிவு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 74 வயதான தன்கர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பிய கடிதத்தில், உடல்நலத்தை முன்னுரிமையாக்குவதற்காக இந்த முடிவை எடுத்ததாகவும், மருத்துவ ஆலோசனையின் பேரில் உடனடியாக பதவி விலகுவதாகவும் தெரிவித்தார். இந்திய அரசியலமைப்பின் 67(எ) பிரிவின்படி, அவரது ராஜினாமா உடனடியாக நடைமுறைக்கு வந்தது.

2022ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி முதல் குடியரசு துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த தன்கர், மாநிலங்களவையை நடத்திய விதம் குறித்து பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டார். தன்கர் தங்கள் உறுப்பினர்களின் பேச்சுக்கு குறுக்கீடு செய்ததாகவும், பாரபட்சமாக நடந்து கொண்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.
இதையும் படிங்க: ஒரு டிரான்ஸ்பருக்கு ரூ.70 லட்சம் லஞ்சம்!! சீக்ரெட் ஆடியோவால் சிக்கிய நேபாள அமைச்சர்..!
மேலும் 2024ம் ஆண்டு டிசம்பரில், எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவர முயன்றன, ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. குறிப்பாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை “ஜனநாயகத்திற்கு எதிரான அணு ஆயுதம்” என விமர்சித்தார்.
ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிய தன்கர், மேற்கு வங்க ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார். 2022இல் 528 வாக்குகள் பெற்று குடியரசு துணைத் தலைவராக வெற்றி பெற்றார். அவரது ராஜினாமா குறித்து, காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத், “ஒரு மணி நேரத்தில் என்ன நடந்தது?” எனக் கேள்வி எழுப்பினார், அதேவேளை ராஜ்யசபை உறுப்பினர் கபில் சிபல், உடல்நலக் காரணங்களை ஏற்று, அவருக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தனது ராஜினாமா கடிதத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சரவையின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த தன்கர், தனது பதவிக்காலத்தில் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் கண்டு பெருமையடைவதாக குறிப்பிட்டார்.
தன்கரின் ராஜினாமா அரசியல் காரணங்களால் உந்தப்பட்டதா அல்லது உண்மையிலேயே உடல்நலப் பிரச்சினைகளால் எடுக்கப்பட்டதா என்பது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த ராஜினாமாவைத் தொடர்ந்து, புதிய குடியரசு துணைத் தலைவர் தேர்வு குறித்து அரசியல் கட்சிகளிடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.
தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்யாமலேயே ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்த நிலையில், அடுத்த துணை குடியரசுத் தலைவராக வரப்போகிறவர் யார் என்ற எதிர்பார்ப்பும் கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் பீகார், மேற்குவங்கம், அசாம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் நகர்வா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: தலையில் இடியை இறக்கிய MLA... திடீர் ராஜினாமாவால் பஞ்சாப் அரசியலில் பரபரப்பு