காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது.
இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதை அடுத்து இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஜம்முவை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இந்தியா மீது மீண்டும் கடந்த 8 ஆம் தேதி இரவு பாகிஸ்தான் தாக்குதலை மேற்கொண்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கடும் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தானின் 8 ஏவுகணைகள் தடுக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமான தளத்தில் தாக்குதல் நடத்த முயன்ற நிலையில், இந்திய விமானப் படை பதிலடியை கொடுத்துள்ளது. இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது.
இதனிடையே இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், நீண்ட நேர இரவு உரையாடலுக்குப் பிறகு அமெரிக்காவின் மத்யஸ்தத்தை இந்தியா பாகிஸ்தான் ஏற்று கொண்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் உடனடியான மற்றும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம்.. டிரம்ப் செய்த தரமான சம்பவம்; என்ன பேசி போரை நிறுத்தியிருப்பார்?

இரு நாடுகளுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன், பொது அறிவு மற்றும் சிறந்த இண்டலிஜென்ஸை அந்த நாடுகள் கொண்டுள்ளது. இந்த விஷயத்தில் புரிந்து கொண்டதற்கு நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே பாகிஸ்தான் தரபிலும் இரு நாடுகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தம் செய்வதாக முடிவெடுத்துவிட்டோம் என்று தெரிவிக்கப்பட்டது. பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளதாக அந்நாட்டு துணை பிரதமர் இஷாக் தார் தெரிவித்தார். தற்போது அதை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக இந்தியா வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார்.

மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு தொடரும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், துப்பாக்கிச் சூடு நிறுத்தம் மற்றும் இராணுவ நடவடிக்கை குறித்து இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளுக்கு எதிராகவும் இந்தியா தொடர்ந்து உறுதியான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது. இனியும் அது தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சிம்லா ஒப்பந்தம் ரத்து... இந்தியாவுடன் போரிட தயாராகிறதா பாகிஸ்தான்?