காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் இருநாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவியது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன.

இதனிடையே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக நாடாளுமன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு, மத்திய அரசின் ராஜ்ய ரீதியிலான நடவடிக்கை மற்றும் இராணுவ நிலைப்பாடு குறித்து ஜெய்சங்கர் விளக்கினார். அப்போது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றத்தை தணிக்க மூன்றாம் தரப்பு நாடுகள் மத்தியஸ்தம் செய்ததாக வெளியான தகவலை நிராகரித்தார். 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்குவதற்கு முன்பு பயங்கரவாதிகளையும் அவர்களின் முகாம்களையும் மட்டுமே குறிவைத்து தாக்க இருப்பதாக பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஜெய்சங்கர் பேசியதாக வெளியான வீடியோ தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க: 2வது முறையாக நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார் ராகுல்காந்தி... காரணம் இதுதான்!!

இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு முன்பு பாகிஸ்தானுக்கு தகவல் அளித்ததாக காங்கிரஸ் முன்வைத்த குற்றசாட்டு நேர்மையற்றது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்ட பிறகே பாகிஸ்தானுக்கு தகவல் அளித்தோம். எதிர்க்கட்சிகள் உண்மையை தவறாக சித்தரிக்க முயற்சிக்கின்றன. எனது கருத்தை தவறாக மேற்கோள் காட்டி சில தலைவர்கள் அரசியல் செய்வது துரதிர்ஷ்டவசமானது. பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்பின் தலைமையகங்களை பாதுகாப்பு படையினர் துல்லியமாக தாக்கினர். பயங்கரவாத முகாம்களில் நடத்தப்பட்ட தாக்குதல் பாகிஸ்தான் படைகளின் மன உறுதியையும் பாதித்தது. உலகில் உள்ள 200 நாடுகளில், துருக்கி, அஜர்பைஜான் மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்றன.

பாகிஸ்தானுடன் நெருக்கமான உறவை கடைபிடித்து வரும் சீனா கூட , பாகிஸ்தானுக்கு தெளிவான ஆதரவை வழங்கவில்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை உலக நாடுகள் பலவும் பாராட்டின. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதன் தாக்கம் அடுத்த சில நாட்களில் தெரியும். சண்டை நிறுத்தம் வெறும் தற்காலிக நடவடிக்கைதான். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பயங்கரவாதம் தவிர, பாகிஸ்தானுடன் வேறு எந்த பேச்சுவார்த்தையும் இருக்க போவது இல்லை. ஆபரேஷன் சிந்தூரை நிறுத்திய விவகாரத்தில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் குறித்த பேச்சுக்கே இடம் இல்லை. பாகிஸ்தான் ராணுவ ஜெனரல், இந்திய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். அதன்பிறகே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு செக்... நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜெய்சங்கர்; பின்னணி இதுதனாம்!!