தவெக தலைவர் விஜய் கடந்த 27ஆம் தேதி கரூரில் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த கோர சம்பவத்தை அடுத்து தமிழ்நாடு அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளும் நிதியுதவியை அறிவித்தன. குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். முதலில் இந்த தொகையை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடைய வங்கிக்கணக்கில் செலுத்த தவெக திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டன.
ஆனால் தற்போது விஜய் கரூர் செல்ல திட்டமிட்டிருப்பதால் அவரே பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து காசோலையை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அனுமதி கோரி தவெக சார்பில் காவல்துறையிடம் மனு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி கிடைத்த பிறகு விஜய் கரூர் செல்வது திட்டமிடப்படும். இதனிடையே, நேற்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை விஜய் தத்தெடுக்கவுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை வாழ்நாள் முழுவதும் செய்யவுள்ளதாகவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஜேப்பியர் தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவரும், தவெக நிர்வாகியும் மரிய வில்சன் அறிவித்துள்ள உதவியானது பெரும் கவனம் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: தீர்ப்பு வெளியான 6 மணி நேரத்திற்கு பிறகு... தவெக தலைவர் விஜய் வெளியிட்ட பரபர பதிவு...!
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் “நாங்கள் அறிவித்தபடி, கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டான பலன் சென்று சேரவேண்டும் என்பதற்காக ஒரு குழுவை அமைத்திருக்கிறேன். அக்குழு நாளை அவர்களை சந்திக்கிறது. ஏற்கனவே நான் அறிவித்தபடி, கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கிடவும், ஆயுள் காப்பீடு செய்து தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி 5,000/- ரூபாயை ஒவ்வொரு மாதமும், பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர்/தலைவியின் வாழ்நாள் முழுக்க வழங்க இருக்கிறேன். நாளை முதல் என் குழு செயற்பாட்டை ஆரம்பிக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என மரிய வில்சன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், இன்று முதல் இதற்கான பணிகளில் கரூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சிபிஐ அதிகாரிகளுக்கு என்ன ரெண்டு மூளையா? சீமான் அடுக்கடுக்கான கேள்வி...!