கமல்ஹாசன், இந்தியத் திரைப்படத்துறையில் ‘உலகநாயகன்’ என்று புகழப்படும் ஒரு பன்முகக் கலைஞர். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், பாடகர் என பல துறைகளில் தனது முத்திரையைப் பதித்தவர். 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் முன்னணியில் இருக்கும் கமல்ஹாசன், 2018ஆம் ஆண்டு முதல் அரசியல் களத்திலும் தனது பயணத்தைத் தொடங்கி, 2025ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக முதன்முறையாக நாடாளுமன்றத்தில் கால் பதித்திருக்கிறார். கமல்ஹாசனின் அரசியல் ஆர்வம் புதியதல்ல. அவரது திரைப்படங்கள் பலவற்றில் சமூக நீதி, ஊழல் எதிர்ப்பு, மக்கள் பிரச்னைகள் ஆகியவற்றைப் பேசியவர். நாயகன், ‘இந்தியன், அன்பே சிவம் போன்ற படங்கள் அவரது சமூக அக்கறையை வெளிப்படுத்தின. ஆனால், நேரடி அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு, அவர் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றி, ரத்த தானம், கண் தானம், உடல் தானம் போன்ற சமூகப் பணிகளை மேற்கொண்டார்.
2017ஆம் ஆண்டு மத்தியில், கமல்ஹாசன் அரசியல் களத்தில் இறங்குவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தத் தொடங்கினார். அரசின் நிர்வாகக் குறைபாடுகளை விமர்சித்து, ட்விட்டர் மற்றும் பொது மேடைகளில் பேசினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய அரசியல் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு என்று அவர் கூறியது, அவரது அரசியல் பயணத்தின் உறுதியான தொடக்கத்தைக் குறித்தது.

2018ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி, மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்டமான கூட்டத்தில் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் என்பதைத் தொடங்கினார். இந்த விழாவில் தில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கமலின் கட்சி, ஊழல் எதிர்ப்பு, சமூக நீதி, பகுத்தறிவு, மதச்சார்பின்மை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அவர் காந்தியையும், ஈ.வெ.ரா. பெரியாரையும் தனது முன்னோடிகளாகக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: வாக்காளர் சிறப்பு திருத்தம்..! மறுக்கும் அரசு.. மடைமாறாத எதிர்க்கட்சிகள்..!
2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் 37 தொகுதிகளில் போட்டியிட்டது. கட்சி தொடங்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் இத்தகைய பரந்த அளவில் தேர்தலைச் சந்தித்தது கமலின் தைரியத்தைக் காட்டியது. இருப்பினும், கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஆனால், சுமார் 15.75 லட்சம் வாக்குகளைப் பெற்று, 3.78% வாக்கு விகிதத்தை அடைந்தது. 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், இந்தத் தேர்தலில் 2.62% வாக்குகளை மட்டுமே பெற்றது. இந்தத் தேர்தல், கமலின் கட்சிக்கு இன்னும் வலுவான அமைப்பு மற்றும் தொண்டர்கள் தேவை என்பதை உணர்த்தியது. 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம், திமுக தலைமையிலான கூட்டணியின் ஆதரவுடன், கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாநிலங்களவை உறுப்பினராக, கமல்ஹாசனுக்கு தேசிய அளவில் தனது கருத்துகளை முன்வைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரது பேச்சுத் திறனும், சமூக அக்கறையும், பகுத்தறிவு சிந்தனையும் நாடாளுமன்ற விவாதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக, கல்வி, சமூக நீதி, மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற துறைகளில் அவரது பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. கமல் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்க உள்ள நிலையில் அவரது கன்னிப் பேச்சு எதையெல்லாம் வெளிப்படுத்தும் என்பது ஆர்வத்தை தூண்டி உள்ளது.
இதையும் படிங்க: நாடு-னு வரும்போது ஒற்றுமை அவசியம்.. எதிர்க்கட்சிகள் புரிஞ்சுக்கணும்! பிரதாப் ராவ் வலியுறுத்தல்..!