கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சிபிஐ வழக்கு பதிந்து கரூரில் தற்காலிக விசாரணை முகாம் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
முன்னதாக கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி கரூர் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தவெக கூட்ட நெரிசல் வழக்கை தமிழ்நாடு வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவும், தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான தனிநபர் விசாரணை ஆணையமும் விசாரிக்க தடை விதித்தது. மேலும் விசாரணை ஆவணங்கள் டிஜிட்டல் வீடியோ ஒளிப்பதிவு காட்சிகள் ஆகியவற்றை உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.
இதன் காரணமாக, கடந்த அக்டோபர் 17ம் தேதி முதல் சிபிஐ அதிகாரிகள், கரூரில் முகாம் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணையை மேற்பார்வையிடுவதற்கு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் தமிழ்நாட்டை பூர்வீக இடமாக கொள்ளாத இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட மூன்று பேர் அடங்கிய குழுவை நியமித்தது. இந்த குழுவின் மேற்பார்வையில் தற்போது கரூரில் சிபிஐ விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: சிபிஐ வசம் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்? - இறுகும் பிடி... 2வது நாளாக ஆனந்த், ஆதவிடம் விசாரணை...!
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சித்தி 41 பேர் உயிரிழந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் சிபிஐ விசாரணையை ரத்து செய்துவிட்டு, தமிழ்நாடு அரசு அமைத்த SIT வசமே வழக்கு விசாரணையை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறையின் விசாரணை சரியான திசையில் தான் சென்று கொண்டு இருந்ததாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
மேலும் அருணா ஜெகதீசனின் ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை மீண்டும் தொடரும் வகையில் தடை உத்தரவை நீக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மறக்க முடியாத கரூர் துயரச் சம்பவம்..!! திமுக ஆட்சியின் நிர்வாக நெருக்கடி அம்பலம்..!!