கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. பெரும் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, 45 ஆண்டுகளாக இடது சாரி முன்னணி ஆதிக்கம் செலுத்தி வந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க. தனித்து போட்டியிட்டு கைப்பற்றியுள்ளது.
மாநிலம் முழுவதும் பல உள்ளாட்சி அமைப்புகளில் பா.ஜ.க. கால் பதித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி மீதான மக்கள் நம்பிக்கையும், கேரள பா.ஜ.க. தொண்டர்களின் தொடர் உழைப்புமே காரணம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றி தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பூத் வாரியாக கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கமிட்டி உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் நடந்து வருகின்றன. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: சின்ன சங்கடம் கூட வரக்கூடாது!! அதிமுக - பாஜ தொகுதி பங்கீடு!! அமித்ஷா வகுக்கும் வியூகம்!

விரைவில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அப்போது பூத் கமிட்டி உறுப்பினர்கள் தங்கள் வாக்குச்சாவடி பகுதி வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, தகுதியில்லாத பெயர்கள் இருந்தால் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
கேரளாவில் கிடைத்த இந்த அபார வெற்றி விரைவில் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்று அவர் உறுதியுடன் தெரிவித்தார். தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடம் உருவாகியுள்ளதாகவும் கூறினார்.
இதனை சரியாகப் பயன்படுத்தி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றி பெற்றுத் தருவோம். அந்த வெற்றியை பிரதமர் மோடிக்கு சமர்ப்பிப்போம் என்று நயினார் நாகேந்திரன் உற்சாகமாக அறிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு தமிழக பா.ஜ.க. தீவிரமாக தயாராகி வருவது இந்த அறிக்கையில் தெளிவாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: நாத்திக போர்வையில் இந்து பக்தர்களை பழிவாங்காதீங்க!! தமிழக, கேரள அரசுக்கு நயினார் கண்டனம்!