கேரளாவில் சில தனியார் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்ததாக வந்த செய்திகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பள்ளிகளை வகுப்புவாத ஆய்வகங்களாக மாற்ற அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கேரளாவில் ஓணம், கிறிஸ்துமஸ், ஈத் உள்ளிட்ட அனைத்து மதங்களின் பண்டிகைகளும் பள்ளிகளில் ஒரே மாதிரியாக கொண்டாடப்படுவது நீண்டகால பாரம்பரியம். மதம், சாதி கடந்து மாணவர்கள் ஒன்றாகக் கல்வி கற்கும் இடமாக பள்ளிகள் உள்ளன.
ஆனால் சில தனியார் பள்ளி நிர்வாகங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து, மாணவர்களிடம் இருந்து பிரித்தெடுத்த பணத்தைத் திருப்பித் தந்ததாகச் செய்திகள் வெளியாகின.
இதையும் படிங்க: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு என்னாச்சு? சென்னை மருத்துவமனையில் அட்மிட்
இதைத் தொடர்ந்து கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. முதல்வர் பினராயி விஜயன், “பள்ளிகளை வகுப்புவாத ஆய்வகங்களாக மாற்ற அனுமதிக்க மாட்டோம். பிரிவினைவாத விதைகளை விதைக்கும் முயற்சியை ஏற்க முடியாது” என்று தெரிவித்தார்.
கேரளாவின் ஜனநாயக உணர்வும் மதச்சார்பின்மை பாரம்பரியமும் உயர்ந்தது என்றும், வட இந்திய மாடல்களைப் போல மத அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் முயற்சிகளுக்கு இடமில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி, இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். ஒரு மதத்தின் கொண்டாட்டங்களுக்கு மட்டும் தடை விதிப்பது பாகுபாடு என்றும், அது சகிக்கப்படாது என்றும் அவர் கூறினார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மைக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சில பள்ளிகள் சங் பரிவார் தொடர்புடையவை என்று சிபிஎம் ஊடகமான ‘தேசாபிமானி’ குற்றம்சாட்டியது. ஆனால் ஆர்எஸ்எஸ் தரப்பு இதை மறுத்து, எந்தப் பள்ளியும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைத் தடை செய்யவில்லை என்று தெரிவித்தது. சில பள்ளி நிர்வாகங்கள் கொண்டாட்டங்கள் நடக்கும் என்று விளக்கமளித்தன.
கேரளாவின் மதச்சார்பின்மை பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் வகையில் அரசின் இந்த எச்சரிக்கை வரவேற்கத்தக்கது என்று பலர் கருதுகின்றனர். இது போன்ற சம்பவங்கள் கேரளாவின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதையும் படிங்க: கேரளாவில் ஆழமாக காலூன்றும் பாஜக! உள்ளாட்சி மட்டுமல்ல சட்டசபையிலும் எதிரொலிக்குமா வெற்றி?!