உள்ளாட்சி பொதுத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் உள்ள 471 கிராம பஞ்சாயத்துகள், 75 தொகுதி பஞ்சாயத்துகள், 7 மாவட்ட பஞ்சாயத்துகள், 39 நகராட்சிகள் மற்றும் 3 மாநகராட்சிகள் என 595 உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 11,168 வார்டுகளுக்கும் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த உள்ளாட்சி தேர்தலில் 62 லட்சத்து 51 ஆயிரத்து 219 ஆண்கள், 70 லட்சத்து 32 ஆயிரத்து 444 பெண்கள், 126 திருநங்கைகள் மற்றும் 456 வெளிமாநில வாக்காளர்கள் என மொத்தம் 1 கோடியே 32 லட்சத்து 83 ஆயிரத்து 789 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
பஞ்சாயத்துகளில் மொத்தம் 10146336 வாக்காளர்கள், நகராட்சிகளில் 15 லட்சத்து 58 ஆயிரத்து 524 வாக்காளர்கள் மற்றும் மாநகராட்சிகளில் 15 லட்சத்து 78 ஆயிரத்து 929 வாக்காளர்கள் உள்ளனர்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்...!! - பாஜக சார்பில் போட்டியிடும் “சோனியா காந்தி” - காங்கிரஸை எதிர்த்து களமிறங்கிய சுவாரஸ்சியம்...!
17,056 ஆண் வேட்பாளர்கள், 19,573 பெண் வேட்பாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 36,630 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கிராம பஞ்சாயத்து வார்டுகளுக்கு 27,141 வேட்பாளர்கள், தொகுதி பஞ்சாயத்துக்கு 3,366 பேர், மாவட்ட பஞ்சாயத்துக்கு 594 பேர், நகராட்சிகளுக்கு 4,480 பேர் மற்றும் மாநகராட்சிகளுக்கு 1,049 பேர் போட்டியிடுகின்றனர்.
முதல் கட்டத்தில் மொத்தம் 15432 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 480 வாக்குச்சாவடிகள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவை என அறிவிக்கப்பட்டுள்ளன.
திருவனந்தபுரத்தில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தமது ஓட்டைச் செலுத்த வந்திருந்தார். அவரை பாஜ வேட்பாளர் ஸ்ரீலேகா வரவேற்றார். பின்னர் வரிசையில் நின்றிருந்த சுரேஷ் கோபி தமது ஓட்டை பதிவு செய்தார். அவருடன் அவரது மனைவியும் தமது ஜனநாயக கடமையை ஆற்றினார். ஓட்டுப்பதிவு இன்று மாலை 6 மணி வரை நடக்கிறது. முதல்கட்ட ஓட்டுப்பதிவை முன்னிட்டு, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
உள்ளாட்சி தேர்தலையொட்டி, கேரளாவில் உள்ள மத்திய அரசு தொழிற்சாலைகளுக்கு விடுமுறை இல்லை. அதேபோல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் வாக்குப்பதிவு செய்து விட்டு சற்று தாமதமாக வரலாம் அல்லது வேலை முடிந்து வாக்களிக்கலாம் என்று தெரிவித்து உள்ளது.
கேரள அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை, 11-ந் தேதி விடுமுறை அளித்து கேரள அரசு அறிவித்து உள்ளது. தனியார் துறை நிறுவனங்கள், ஐ.டி. ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: 8வது நாளாக.. இண்டிகோ விமான சேவை பாதிப்பு..!! பரிதவிக்கும் பயணிகள்..!!