புதுடெல்லி: “வந்தே மாதரம்” தேசியப் பாடல் 150-வது ஆண்டு விழாவையொட்டி மாநிலங்களவையில் இன்று நடந்த விவாதம், அரசியல் களமாக மாறியது! உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜவஹர்லால் நேருவையும் இந்திரா காந்தியையும் கடுமையாக விமர்சித்து பேசியதற்கு, காங்கிரஸ் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே கொதித்தெழுந்து பதிலடி கொடுத்தார்.
அமித் ஷா பேசுகையில், “நேரு வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களை மட்டும் பாட வேண்டும் என்று சொன்னார். அங்கிருந்துதான் சமரசம் தொடங்கியது… அது பிரிவினைக்கு வழிவகுத்தது. 100-வது ஆண்டு விழாவின்போது வந்தே மாதரம் சொன்னவர்களை இந்திரா காந்தி சிறையில் அடைத்தார்” என்று குற்றம் சாட்டினார்.
உடனே எழுந்த கார்கே, “வந்தே மாதரத்தை சுதந்திர போராட்ட முழக்கமாக மாற்றியது காங்கிரஸ்தான்! காங்கிரஸ் மாநாடுகளில்தான் முதலில் பாடப்பட்டது. நீங்கள் பாடினீர்களா? பிரதமரும் உள்துறை அமைச்சரும் நேருவை அவமதிக்க ஒரு வாய்ப்பையும் தவறவிடுவதில்லை.
இதையும் படிங்க: வந்தே மாதரம் விவாதம்!! நேரு, காங்கிரசை பொளந்து கட்டிய மோடி! ராகுல்காந்தி நச் பதில்!

1937-ல் காங்கிரஸ் காரியக் கமிட்டி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது – மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் படேல், மௌலானா ஆசாத் உள்ளிட்ட அனைவரும் ஆதரித்தார்கள். நேருவை மட்டும் ஏன் குறிவைக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
“முஸ்லிம்களை திருப்திப்படுத்தினார் என்று இன்று சொல்கிறீர்கள்… வங்கத்தில் முஸ்லிம் லீக்குடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தியபோது உங்கள் தேசபக்தி எங்கே போனது?” என்று அமித் ஷாவையே நேரடியாக சாடினார். “நேருவின் பிம்பத்தைக் குறைக்க முயன்றால் அது சாத்தியமில்லை. இந்த நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்னைகளுக்காக உழைப்பதுதான் பாரத் மாதாவுக்கு உண்மையான அஞ்சலி” என்று முடித்தார்.
கார்கே “வந்தே மாதரம்” முழக்கத்துடன் பேச்சைத் தொடங்கியதும் அவை முழுவதும் கைத்தட்டல் எழுந்தது. அமித் ஷாவின் நேரு-இந்திரா விமர்சனத்திற்கு கார்கே கொடுத்த இந்த அதிரடி பதிலடி, சமூக வலைதளங்களில் வைரலாகி, பாஜக-காங்கிரஸ் மோதலை மீண்டும் தீவிரமாக்கியுள்ளது. வந்தே மாதரம் விழாவே அரசியல் சண்டையாக மாறியதால், பார்லிமெண்ட் இன்று கொதித்தது!
இதையும் படிங்க: தாயின் மணிக்கொடி பாரீர்! பார்லி-யில் ஒலித்த தமிழ்!! பிரதமர் மோடி கவுரவம்!