புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் தொடர்ந்து அமளி நிலவி வரும் நிலையில், முக்கிய மசோதாக்கள் மீது முறையாக விவாதம் நடைபெறுவதற்கு அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் பொதுவான உடன்பாட்டுக்கு வர வேண்டும் என்று லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தியுள்ளார்.
மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20ம் தேதி தொடங்கியது. தொடக்கம் முதலே பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பல சந்தர்ப்பங்களில் லோக்சபா நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சில முக்கிய மசோதாக்களும் விவாதம் குறைவாக அல்லது அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், ஆகஸ்ட் 11ம் தேதியும் லோக்சபாவில் அமளி ஏற்பட்டதால், அவை நடவடிக்கைகள் மதியம் 2 மணி வரை பாதிக்கப்பட்டன. இதையடுத்து சபையில் பேசிய ஓம் பிர்லா, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: பாராளுமன்றத்தில் மீண்டும் அமளி! அமித் ஷா ராஜினாமா கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம்! லோக்சபா ஒத்திவைப்பு!
டில்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. அந்த கோரிக்கைக்கு அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக ஓம் பிர்லா தெரிவித்தார்.

சபை எந்தவித இடையூறும் இன்றி செயல்பட்டால், எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள பிற பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க முடியும் என்றும் அவர் கூறினார். முக்கிய மசோதாக்கள் மீது ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெறுவதற்கு ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் பொதுவான உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
லோக்சபா செயல்படாமல் முடங்குவது தமக்கு வேதனை அளிப்பதாகவும் ஓம் பிர்லா தெரிவித்தார். பார்லிமென்ட் நடைமுறைகளுக்கு எதிரானது என்பதால், சபைக்குள் எம்.பி.,க்கள் பதாகைகளை காட்டக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், கேள்வி நேரம் மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்ட அவர், அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்கு கேள்வி நேரம் உதவுகிறது என்றார். பார்லிமென்டில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறுவதை நாட்டு மக்களும் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனால், மழைக்கால கூட்டத்தொடரின் மீதமுள்ள நாட்களிலாவது அமளியை தவிர்த்து முக்கிய மசோதாக்கள் மீது விவாதம் நடத்த அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எதிர்க்கட்சிகள் இன்றும் அமளி! முடங்கியது பாராளுமன்றம்! ஆகஸ்ட் -3ம் தேதி வரை இரு அவைகளும் ஒத்திவைப்பு!