17 ஆண்டுகளுக்குப் பிறகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. திருக்குட நன்னீராட்டு விழாவை அடுத்து செப்டம்பர் 11 முதல் 17 வரை 12 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேகத்திற்காக வடக்கு ஆடி வீதியில் 184 யாக குண்டங்கள், 56 யாக சாலைகள் மற்றும் அம்மனுக்கு 33 யாக குண்டங்களும், சுவாமிக்கு 33 யாக குண்டங்களும் அமைக்கப்பட்டன
புனித நீர் கலசத்தில் நீர் நிரப்புவதற்காக புண்ணிய நதியான கங்கையிலிருந்து 1,008 லிட்டர் புனித நீர் மற்றும் 7 புண்ணிய நதிகளிலிருந்து 1,008 லிட்டர் புனித நீர் கொண்டு வரப்பட்டது. யாகசாலை பூஜை மற்றும் திருக்குட நன்னீராட்டு விழாவில் 300-க்கும் மேற்பட்ட பட்டர்கள் பங்கேற்று பூஜைகளை முன்நின்று நடத்தினர்.
இதனை தொடர்ந்து இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 7.40 மணிக்கு அருள்மிகு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தங்க விமானங்கள் மற்றும் இராஜகோபுரங்கள் சமகால திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. 12 கோபுரங்களுக்கான திருக்குட நன்னீராட்டு விழாவிற்காக புனிதநீர் கலசங்களை பட்டர்கள் தலையில் சுமந்து கோபுரங்களை நோக்கி சென்றனர். ராஜகோபுரத்தின் மீது புனித நீர் ஊற்றி பட்டாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். 12 கோபுரங்கள் மீதும் ஒரே நேரத்தில் புனித நீரை ஊற்றி பட்டர்கள் மதுரை மீனாட்சி அம்மனை உச்சி குளிர வைத்தனர்.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் பரபரப்பு... தடுப்புகளை தாண்டி குதித்த பக்தர்கள்... பாதுகாவலர்களுடன் வாக்குவாதம்...!
அதனைத் தொடர்ந்து சரியான காலை 7.55 மணிக்கு மூலவர் மீனாட்சி அம்மன் கோபுரத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டது. அதனையடுத்து காலை 8.10 மணிக்கு மூலவர் சுந்தரேஸ்வரர் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 5 இலட்சம் டன் வண்ண, வண்ண மலர்களால் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் முழுவதும் வாழை மரங்கள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது
திருக்கோவில் வளாகம், கோபுரங்கள், விமானங்கள் என அனைத்து பகுதிகளிலும் வண்ண வண்ண விளக்குகள் மற்றும் லேசர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோவில் மேற்கூறையில் நின்று திருக்குட நன்னீராட்டு விழாவை காண்பதற்காக 9,000 நபர்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது.
சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள் மற்றும் மாசி வீதிகளில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. திருக்குட நன்னீராட்டு விழா நிறைவு பெற்றதற்கு பின்னர் காலை 10 மணி முதல் கோவிலுக்குள் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்
இதையும் படிங்க: கோரிக்கை நிறைவேறுமா..? போராடும் தமிழ் ஓதுவார்கள்.. அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு வார்த்தை..!!