புதுடெல்லி, டிசம்பர் 11: அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்புக்கு பின், இப்போது மெக்சிகோவும் இந்தியாவுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளது. இதனால் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் பெரும் சரிவை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மிரட்டல்களால் மெக்சிகோ இந்த முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச வர்த்தக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது உலகளாவிய வர்த்தகப் போரின் புதிய அத்தியாயமாக மாறியுள்ளது.
மெக்சிகோ செனட்டில் நடந்த விவாதத்தின் பிறகு, இந்தியா, சீனா, தென் கொரியா, தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 1,400க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு 5% முதல் 50% வரை புதிய வரிகள் விதிக்க மெக்சிகோ ஒப்புதல் அளித்துள்ளது.
குறிப்பாக, வாகனங்கள், வாகன உதிரிபாகங்கள், ஜவுளி, பிளாஸ்டிக் பொருட்கள், ஸ்டீல் போன்ற முக்கிய பொருட்களுக்கு 50% வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரிகள் 2026 ஜனவரி 1 அன்று முதல் நடைமுறைக்கு வரும். இதன் மூலம் மெக்சிகோவுக்கு ஆண்டுக்கு சுமார் 3.76 பில்லியன் டாலர் (தோராயமாக 33,910 கோடி ரூபாய்) கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று அந்நாட்டு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: டெல்லி பறக்கு நயினார் நாகேந்திரன்! அமித் ஷாவுடன் மீட்டிங்! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!
மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் இந்த முடிவை விளக்குகையில், "உள்நாட்டு உற்பத்தியைப் பாதுகாக்கவும், உள்ளூர் தொழில்களை வலுப்படுத்தவும் இந்த வரிகள் விதிக்கப்படுகின்றன" என்று கூறினார். ஆனால், வர்த்தக நிபுணர்கள் இதை டிரம்பின் அழுத்தத்தின் விளைவாகவே பார்க்கின்றனர்.
அமெரிக்காவும் மெக்சிகோவும் அண்டை நாடுகளாக இருந்தாலும், அமெரிக்கா மெக்சிகோவின் மிகப்பெரிய வர்த்தகத் துணையாக உள்ளது. அமெரிக்கா-மெக்சிகோ-கனடா (USMCA) வர்த்தக ஒப்பந்தத்தை டிரம்ப் மறுஆய்வு செய்ய அறிவித்துள்ளார். இதற்கு முன் டிரம்பை திருப்திப்படுத்தும் முயற்சியாக மெக்சிகோ இந்த வரிகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா இந்தியாவுக்கு 50% வரி விதித்தது ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதையும், அமெரிக்காவுடனான வர்த்தகப் பற்றாக்குறையையும் காரணமாகக் காட்டி நடத்தியது. அதேபோல், உக்ரைன் மீதான ரஷ்யப் போருக்கு ஆதரவாக இருக்கும் ஐரோப்பிய நாடுகளையும் இந்தியாவுக்கு வரி விதிக்கும்படி டிரம்ப் அழுத்தம் தந்தார்.

ஆனால், அந்த நாடுகள் எதுவும் செயல்படவில்லை. இந்நிலையில், டிரம்ப் மெக்சிகோவை வர்த்தகம், பாதுகாப்பு விவகாரங்களில் தொடர்ந்து விமர்சித்து வந்தார். குறிப்பாக, மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்கு ஊடுருவல்கள் நடப்பதாகவும், அதைத் தடுக்கத் தவறியதாகவும் குற்றம் சாட்டினார். இதனால் பயந்து, டிரம்பை சமாதானப்படுத்த மெக்சிகோ இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை குறிவைத்து வரி விதித்துள்ளதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியா-மெக்சிகோ வர்த்தகம் 2024ல் 11.7 பில்லியன் டாலராக உச்சத்தை அடைந்தது. இந்தியாவின் ஏற்றுமதி 8.9 பில்லியன் டாலர்கள், இறக்குமதி 2.8 பில்லியன் டாலர்கள் என்பதால், இந்தியாவுக்கு வர்த்தக சாதகமே உள்ளது. ஆனால், இந்த வரிகள் அடுத்த ஆண்டு இந்தியாவின் ஏற்றுமதியை பெரும் அளவில் பாதிக்கும்.
குறிப்பாக, ஆட்டோமொபைல், ஜவுளி, ரசாயனங்கள், இயந்திரங்கள் போன்ற துறைகள் பாதிப்படையும். இந்திய தொழிலத் துறை இதை எதிர்க்கொள்ள வழிகளைத் தேட வேண்டும் என்று வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியா மெக்சிகோவுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) விரைவாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். சீனாவும் இதே போல் பாதிக்கப்பட்டுள்ளது. சீன வர்த்தக அமைச்சகம் இந்த வரிகளை "ஒருதலைப்பட்சமானது" என்று விமர்சித்துள்ளது. உலகளாவிய வர்த்தகப் போரில் இந்தியா தனது சந்தைகளை பலப்படுத்தி, புதிய ஒப்பந்தங்களைத் தேட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: கோவா நைட் கிளப் தீ விபத்து சம்பவம்: தாய்லாந்து தப்பிய விடுதி ஓனர்கள் அதிரடி கைது..!!