கர்னூல் பேருந்து விபத்தில் பரபரப்பான தகவல்களை தடவியல் துறை வெளியிட்டுள்ளது. பேருந்திற்கு அடியில் சிக்கிய இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்கில் பற்றிய தீயே இந்த கோர விபத்திற்கு காரணமாக கூறப்பட்ட நிலையில், தடவியல் துறையினர் பேருந்தின் லக்கேஜ் பாக்ஸில் விதிமுறைகளை மீறி எடுத்துச் செல்லப்பட்ட பொருளே ஒட்டுமொத்த பேருந்தும் தீப்பற்ற காரணம் என்ற ஷாக்கிங் உண்மையை வெளியிட்டுள்ளது.
கர்னூல் மாவட்டத்தில் தனியார் டிராவல்ஸ் வால்வோ பேருந்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கல்லூர் மண்டலத்தில் உள்ள சின்னதேகுரு அருகே காவேரி டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து உலிந்தகொண்டாவில் அருகே சென்றபோது இன்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில், குறுக்கே வந்தே பைக் அதன் மீது மோதியது. அப்போது பைக்கின் பெட்ரோல் டேங்கில் பற்றிய தீயானது, மளமளவென பேருந்தின் முன்பக்கத்தில் பரவியது. சிறிது நேரத்திற்குள், முழு பேருந்தும் முற்றிலுமாக எரிந்தது.
இந்த பேருந்தில் ஓட்டுநர், கிளீனர் உட்பட 40க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில், 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 19 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பேருந்து மீது மோதிய பைக் அதற்கு அடியில் சிக்கியதால், சிறிது தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டதாகவும், அப்போது பைக்கில் இருந்து கசிந்த பெட்ரோல் மீது உராய்வு மூலம் ஏற்பட்ட தீப்பொறிகள் தீ பற்றியதாகவும் கூறப்பட்டது.
இதையும் படிங்க: WARNING... மக்களே கவனமா இருங்க..! 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்...!
ஆனால் பேருந்தை ஆய்வு செய்த தடவியல் குழுவினர், பேருந்தின் முன்பக்கத்தில் உள்ள லக்கேஜ் கேபினுக்குள் இருந்து தான் மிகப்பெரிய அளவிலான தீ பரவியதாக கூறியுள்ளனர். அந்த கேபினில் 400க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் அடங்கிய பார்சல் இருந்ததாகவும், அதிக வெப்பம் காரணமாக அந்த போன்களின் பேட்டரிகள் திடீரென வெடித்தால் தான், தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் லக்கேஜ் கேபினுக்கு மேலே உள்ள இருக்கைகள் மற்றும் பெர்த்களில் பெரும்பாலான பயணிகள் இருந்ததால் தான் தப்பிக்க வழியின்றி உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. அதனால்தான், பெரும்பாலான உயிரிழப்புகள் பேருந்தின் முன்பக்கத்தில் இருந்தவர்கள் என்று தடயவியல் குழுக்கள் சந்தேகிக்கின்றன. விபத்து நடந்த இடத்தையும் எரிந்த பேருந்தையும் ஆய்வு செய்த பிறகு இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பேருந்து லக்கேஜ் கேபினில் இருந்த பேட்டரிகள் வெடித்ததால், பேருந்து பலத்த சத்தம் கேட்டுள்ளது. உடனே ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி, தனது இருக்கைக்கு அடுத்த ஜன்னலிலிருந்து இறங்கி, பேருந்தின் பின்புறம் சென்று அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பேருந்து அடர்ந்த புகை மற்றும் தீப்பிழம்புகளால் சூழப்பட்டது. உள்ளே இருந்த பயணிகள் வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்துள்ளனர். ஏற்கனவே ஓட்டுநர் தப்பியதால் முன்பக்க கதவை திறக்க முடியாமல் போயுள்ளது, இந்நிலையில் அவசர கால கதவும் திறக்க முடியாத அளவிற்கு இருந்ததால் பயணிகள் வெளியே வர முடியாமல் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
உண்மையில், பயணிகள் பேருந்துகளில் மொபைல் போன்கள் போன்ற பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. பயணிகள் வாகனங்களில் தனிப்பட்ட சாமான்களைத் தவிர வேறு எந்தப் பொருட்களையும் கொண்டு செல்லக்கூடாது என்ற விதி இருந்தாலும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் இந்த விதிகளை மீறி, லக்கேஜ் கேபினில் பொருட்களை வைத்ததே இந்த கொடூரமான தீ விபத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: திருமா கார் மோதிய சம்பவம்... முடியாத பிரச்சனை... இருதரப்புக்கும் போலீஸ் சம்மன்...!