ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியா சார்பில் பாகிஸ்தானுக்கு எதிராக ராஜாங்கரீதியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அந்த நாட்டை முடக்கியது. பொருளதார ரீதியாக பாகிஸ்தானுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ராஜதந்திர நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்தது.

இதனையடுத்து யாரும் எதிர்பாரா நிலையில், இரண்டு வாரங்களுக்கு பின்பு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகள், தீவிரவாதிகளின் முகாம்கள், பயிற்சிக் கூடங்கள், தலைமை அலுவலகம், உள்கட்டமைப்புகள் ஆகியவற்றை இந்திய ராணுவத்தின் விமானப்படை நள்ளிராவில் குண்டுவீசி அழித்தது. பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்களுக்கு நீதி கேட்கும் விதமாக, ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையில் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகளுக்கு பேரழிவை இந்திய ஏற்படுத்தியது. லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகமது உள்ளிட்ட தீவிரவாதிகள் அமைப்பின் 9 இடங்களை இந்திய ராணுவம் அழித்தது.
இதையும் படிங்க: கேமராவை பார்த்தால் மட்டும் ரத்தம் கொதிக்குதா? பிரதமரை கேலி செய்த ராகுல்காந்தி.. இணையத்தில் வலுக்கும் எதிர்ப்பு அலை..!

இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கும் விதமாக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு இனிப்பகம் மைசூர் பாக்கின் பெயரை 'மைசூர் ஸ்ரீ' என மாற்றியுள்ளது. மைசூர் பாக், மோத்தி பாக், ஆம் பாக், கோந்த் பாக் போன்ற இனிப்புகளின் பெயர்கள் மைசூர் ஸ்ரீ, மோத்தி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ, கோந்த் ஸ்ரீ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

'பாக்' என்ற வார்த்தையே தங்களுக்கு அசவுகரியத்தை தருவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்ததால் பெயரை இவ்வாறு மாற்றியுள்ளதாக அந்த இனிப்பு கடையின் உரிமையாளர் அஞ்சலி ஜெயின் கூறியுள்ளார். மேலும் தேசபக்தியின் உணர்வு எல்லையில் மட்டும் இருக்கக்கூடாது, ஒவ்வொரு குடிமகனிடமும் இருக்க வேண்டும் என்றும் அதனால்தான் எங்கள் இனிப்புகளின் பெயர்களில் இருந்து 'பாக்' என்பதை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக 'ஸ்ரீ' என்று வைத்துள்ளோம். இந்த மாற்றத்தைச் செய்ய வாடிக்கையாளர்கள் தாங்களாகவே முன்வந்து எங்களை வலியுறுத்தினர் என்றும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி அந்த கடையின் மிகவும் பிரத்யேக படைப்புகளான தங்கம் மற்றும் வெள்ளி இலைகளால் நிரப்பப்பட்ட ஸ்வர்ன் பாஸ்ம் பாக் மற்றும் சாண்டி பாஸ்ம் பாக் ஆகியவை ஸ்வர்ன் ஸ்ரீ மற்றும் சாண்டி ஸ்ரீ என்று மறுபெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஜெய்ப்பூர் முழுவதும் உள்ள பல இனிப்பு கடைகள் இதே வழியைப் பின்பற்றுவதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: காசா மீது குண்டுமழை பொழியும் இஸ்ரேல்.. ஒரே நாளில் 80 பேர் பலி; ஆங்காங்கே கேட்கும் மரண ஓலம்!!