அமலாக்கத் துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு தான் எதிர்ப்பு தெரிவித்ததாக தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சரத் பவார் பேட்டி அளித்துள்ளார். அதில், "காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்த போது, பணமோசடி தடுப்புச் சட்டத்தில் (பி.எம்.எல்.ஏ.) திருத்தங்கள் செய்யப்பட்டன. இது குறித்து நான் எச்சரித்தேன். ஒன்றிய அமைச்சர் என்கிற முறையில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தினேன்.
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் முன்மொழிந்த இந்தத் திருத்தங்கள், எதிர்க்கட்சிகளை குறிவைத்து தவறாக பயன்படுத்தப்படலாம் என்றும் எச்சரித்தேன்.

ஆனால், என்னுடைய எச்சரிக்கைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன. இப்போது இந்தச் சட்டம் எனக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவது குறித்து தற்போது விவாதங்கள் எழுந்துள்ளன. இவை நான் ஏற்கனவே சொன்ன எச்சரிக்கையை உறுதிப்படுத்துகின்றன. எதிர்க்கட்சித் தலைவர்களை அரசியல் உள்நோக்கத்துடன் ஒடுக்க இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்திய அரசியலில் நியாயமான, வெளிப்படையான சட்டங்கள் அவசியம் தேவை" என்று சரத்பவார் தெரிவித்தார்.

பணமோசடி தடுப்புச் சட்டமானது கடந்த 2002ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியுல் கொண்டு வரப்பட்டது. பண மோசடி மற்றும் நிதி குற்றங்களைத் தடுக்கும் வகையில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதையும் படிங்க: பொறியில் சிக்கிய எலியாக அமைச்சர் அன்பில் மகேஸ்.. ஹெச்.ராஜாவின் பகீர் குற்றச்சாட்டு.!!