காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டது. இதை முன் நின்று நடத்தியது பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு. இதனை அடுத்து, பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. இதன் பிறகு இந்திய ராணுவம் பெரிய அளவில் மாற்றம் கண்டு வருகிறது. தாக்குதல் ஒத்திகை, புதிய ரக போர் கருவிகள் இணைப்பு என முழு வீச்சில் நவீனமயமாக்கபட்டு வருகிறது. இப்போது குறைந்த தூர இலக்குகளை தாக்க கூடிய Igla-S என்கிற சிறிய ரக ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து பெற்றுள்ளது.

அவசரகால கொள்முதல் அதிகாரங்களின் கீழ் கையெழுத்திடப்பட்ட 260 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் மூலம் இது கிடைத்துள்ளது. இந்த இக்லா-எஸ் வகை ஏவுகணைகளை எந்த நிலப்பரப்பில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தோளில் சுமந்து செல்லும் அளவுக்கு எடை குறைவானதாக இருக்கும். இதில் ஏவும் அமைப்பு, ஏவுகணைகள் என இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. இதனை ராணுவ வீரர்கள் தோளில் சுமந்து சென்று எங்கு வேண்டுமானலும் வைத்து தாக்குதல் நடத்தலாம். ஏவும் அமைப்புக்குள், ஏவுகணைகளை வைத்து தோளில் சுமந்து கொண்டே சுடலாம். எதிரிகளின் இலக்கில் இருந்து வரும் அகச்சிவப்பு கதிர்களை ஏவுகணை உள்வாங்கிக்கொள்ளும்.
இதையும் படிங்க: அரபிக்கடல் ஆப்ரேசன்.. கடற்படை தளபதிக்கு மோடி கொடுத்த உத்தரவு.. அச்சத்தில் உறையும் பாகிஸ்தான்..!

இதன் மூலம் ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறிய ரக விமானத்தை கூட அவைகள் வானில் பறக்கும் போதே துல்லியமாக குறி வைத்து அழிக்க முடியும். இது 6 கிமீ தொலைவில் மற்றும் 3.5 கிமீ உயரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது. 1990களில் இருந்து இது போன்ற கருவிகள் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டாலும் இப்போது உள்ள இக்லா மாடல் மேம்பட்டது. ஏற்கனவே எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள், ஆளில்லா விமானம் மூலம் ஆட்டம் காட்டி வரும் நிலையில், அவைகளை இது துல்லியமாக தாக்கி அழிக்கும்.

ஜம்முவில் உள்ள 16 கார்ப்ஸ் மண்டலத்திற்கு அருகே இந்த அமைப்புகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவ ட்ரோனை, இந்திய ராணுவம் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளது. மேலும் இதே போல 48 ஏவும் அமைப்புகள், 90 ஏவுகணைகளை வாங்க பாதுகாப்பு துறை டெண்டர் விட்டுள்ளது. இக்லா-எஸ் தவிர ட்ரோன் கண்டறிதல் மற்றும் இடைமறிப்பு அமைப்பை இந்திய ராணுவம் பயன்படுத்துகிறது. இது 8 கிலோமீட்டர் தூரத்திலிருந்து வரும் ட்ரோன்களைக் கண்டறிந்து, ஜாம் செய்து அழிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே போல DRDO சார்பில் உளவு தகவல் சேகரிப்பு மற்றும் கண்காணிப்புக்கான அதிநவீன கருவி, வான்வெளியில் 17 கிலோமீட்டர் உயரத்தில் பறக்க விடப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. உளவு தகவல் சேகரிப்புக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனை வெற்றி அடைந்தது ஒரு மைல்கல் என டி.ஆர்.டி.ஓ., தலைவர் சமீர் தெரிவித்தார்.இப்படி தொழில்நுட்ப ரீதியாக இந்திய ராணுவம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ள நிலையில் பாகிஸ்தானில் ராணுவ தளவாட பற்றாக்குறை நிலவுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான்.. போர் பதற்றத்திற்கு மத்தியில் ஏவுகணை சோதனை..!