ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான 'தி ரெசிஸ்டென்ஸ் பிரன்ட்' (டிஆர்எஃப்) பொறுப்பேற்றது.
கடந்த ஜூலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சந்திப்பில் இந்தத் தாக்குதலில் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை ஆய்வு செய்ததில், காஷ்மீரைச் சேர்ந்த ஒரு நபர் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து, குல்காம் பகுதியைச் சேர்ந்த கட்டாரியா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், உள்ளூர்வாசிகளான பஷீர் அகமது ஜோதர் மற்றும் பர்வேஸ் அகமது ஆகியோரும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பான அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: வார்னிங்!! இந்தியாவை சிதைக்க திட்டமிடும் அசிம் முனீர்! போரை துவங்க திட்டம்!! வெளியான முக்கிய் தகவல்!

மொத்தம் 1,597 பக்கங்கள் கொண்ட இந்தக் குற்றப்பத்திரிகையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி சஜித் ஜாட் என்பவரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர, பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளான பைசல் ஜாட், ஹபீப் தாஹிர், ஹம்சா ஆப்கானி ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உதவிய உள்ளூர்வாசிகளான பஷீர் ஜோதர் மற்றும் பர்வேஸ் அகமது ஆகியோரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டுள்ளன. இதோடு, பாகிஸ்தானின் பங்கு, குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் செயல்பாடுகள், அதற்கான ஆதாரங்கள் உள்ளிட்டவையும் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதல் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்ஐஏவின் இந்த நடவடிக்கை பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூர்! இந்தியாவை ஆயுத சோதனைக்கு பயன்படுத்திய சீனா! அமெரிக்கா அதிர்ச்சி தகவல்!