இந்தியாவில் 1950ம் ஆண்டு மத்திய திட்டக்குழு அமைக்கப்பட்டது. இந்த திட்டக்குழு அரசின் ஆண்டு திட்டங்கள். 5 ஆண்டு திட்டங்களை தீர்மானிக்கும் அமைப்பாகும். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பின் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக 2015ம் ஆண்டு நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். இதன்படி நிதி ஆயோக்கின் கூட்டம், பிரதமர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

நிதி ஆயோக் சார்பில் பொதுவாக ஆண்டுக்கு ஒருமுறை நிர்வாக குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பிரதமர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், துணைநிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள். கடந்த 2015-ல் தொடங்கி இதுவரை 9 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற இப்படியுமா? ஸ்டாலினின் ப்ளான் இதுதான்! ஆர்.பி உதயகுமார் விளாசல்..!

கடந்த ஆண்டு ஜூலையில் டெல்லியில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களை தவிர வேறு மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கர்நாடகா, தெலுங்கானா, இமாசல பிரதேசம், கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள், டெல்லி, புதுச்சேரி யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் அந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் அதில் பங்கேற்காத நிலையில், மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மட்டும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். ஆனால் 5 நிமிடங்களுக்கு மேல் பேச வாய்ப்பு தரவில்லை என்றும் அதற்கு மேல் பேசும்போது மைக் அணைக்கப்பட்டது என்றும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். அதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுதான் கூட்டாட்சி தத்துவமா? முதலமைச்சர் மம்தா பானர்ஜியை இப்படித்தான் நடத்துவதா? எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை பா.ஜனதா அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்று கண்டித்தார்.

இந்த நிலையில், நிதி ஆயோக்கின் 10-வது நிர்வாக குழு கூட்டத்தை டெல்லியில் பிரதமர் தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுக்கும் இதற்கான அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. இந்தியாவை வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த நாடாக மாற்றும் இலக்கில் மாநிலங்களின் பங்களிப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த 10-ஆவது நிதி ஆயோக் கூட்டத்தின் மையக் கருத்தாக ‘வளா்ந்த பாரதத்துக்கான இந்திய அணி 2047’ என்ற வாசகம் முன்னிறுத்தப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதல்வா்களுடன் பிரதமா் பங்கேற்கும் கூட்டம் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெருகிறது. இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தமிழகத்தின் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும்படி முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார். ஆனால் இன்று நடைபெறும் கூட்டத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜியும், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி புது தில்லி வராத நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி சித்தராமையாவும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்தாண்டு நடைபெற்ற கூட்டத்தில் I.N.D.I.A கூட்டணி முதலமைச்சர்கள் புறக்கணித்த நிலையில் இந்தாண்டு நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் மு.க.ஸ்டாலின் பிரதமா் மோடியை தனியாக சந்திக்கவும் முயற்சித்து வருவதாகவும் கூறப்பட்டது. ஏற்கனவே கல்வித்துறைக்கான நிதி விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு தமிழக அரசு சென்றுள்ள நிலையில் இந்த சந்திப்புக்கும் முயற்சிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு மே 24 சென்னை திரும்புவதாக இருந்த முதல்வா் தனது பயணத்தையும் மே 25 ஆம் தேதி காலை வரை ஒத்திவைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இதையும் படிங்க: அமைச்சர்கள் கஜானாவில் ஆயிரம் கோடிகள்? வீடியோ வெளியிட்டு தோலுரிக்கும் அண்ணாமலை..!