சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடுகளைத் தடுக்கவும் போலி இணைப்புகளைக் கண்டறிந்து நீக்கவும், அனைத்து சமையல் எரிவாயு நுகர்வோரும் வரும் அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் தங்கள் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்றும், தவறினால் மானிய விலையிலான கியாஸ் சிலிண்டர் வழங்கப்படாது என்றும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்தியாவில் உள்ள இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் மூலம் கோடிக்கணக்கான குடும்பங்கள் சமையல் எரிவாயு இணைப்புகளைப் பெற்றுப் பயன்படுத்தி வருகின்றன. இவர்களில் பிரதமரின் உஜ்வாலா திட்டப் பயனாளிகள் மற்றும் பொதுப் பிரிவு நுகர்வோர் அரசு வழங்கும் மானியத்தின் பலனைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஒரே பெயரில் பல இணைப்புகள் வைத்திருப்பது, பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் மற்றும் இறந்துபோனவர்களின் பெயரில் தொடர்ந்து மானியம் பெறுவது போன்ற முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலில், அனைத்து சமையல் எரிவாயு நுகர்வோரும் தங்களுக்குரிய எரிவாயு ஏஜென்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ அல்லது சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்கள் மூலமாகவோ கைரேகை மற்றும் கண் கருவிழி அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரத்தை வரும் அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் முடித்துவிட வேண்டும். இந்த காலக்கெடுவிற்குள் இ-கேஒய்சி சரிபார்ப்பை முடிக்காத வாடிக்கையாளர்களுக்கு மானிய விலையிலான சிலிண்டர் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்படும்; அவர்கள் சந்தை விலையிலேயே சிலிண்டர்களைப் பெற நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நல்ல வேளை தப்பிச்சிட்டேன்!! கொளத்தூர் மக்களே.. கோடான கோடி நன்றி!! கும்பிடு போட்ட மு.க ஸ்டாலின்!!
காலக்கெடு முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் பகுதியிலுள்ள எரிவாயு விநியோக மையங்களுக்கு விரைந்து சென்று பயோமெட்ரிக் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பல இடங்களில் எரிவாயு ஏஜென்சிகளில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. முதியவர்கள் மற்றும் நோயாளிகள் சிரமமின்றிப் பயோமெட்ரிக் பதிவு செய்ய ஏதுவாக, சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்கள் மூலமாகவே வீடுகளிலேயே செல்போன் செயலி வாயிலாக இ-கேஒய்சி செய்யும் வசதியும் நடைமுறையில் உள்ளதால், நுகர்வோர் காலதாமதமின்றி உடனடியாக இந்த நடைமுறையை முடித்துக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: ரீல்ஸ் மட்டுமே மூலதனம்.. இதை வைத்து ஆட்சிக்கு வந்துவிட்டார்கள்..!! தவெகவை விமர்சித்த இபிஎஸ்..!!