சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகளை செயல்படுத்துவதற்கான கோப்புகளுக்கு நிதித்துறை ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திட்டங்களின் செலவு மற்றும் நடைமுறை சாத்தியம் தொடர்பாக நிதித்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்தில் முடிவடைந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், விதி 110-ன் கீழ் முதல்வர் சார்பில் 17 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதேபோல் 51 துறைகளின் சார்பில் 1,117 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்புகளை நடைமுறைப்படுத்த, சம்பந்தப்பட்ட துறைகள் முதலில் விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிக்க வேண்டும். அதில் திட்ட மதிப்பீடு, செலவினம், செயல்படுத்தும் வழிமுறை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும். பின்னர் அந்த கோப்புகள் நிதித்துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகின்றன. நிதித்துறை ஒப்புதல் கிடைத்த பிறகே அரசாணை வெளியிட்டு புதிய திட்டங்களை செயல்படுத்த முடியும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக திட்டத்தில் திடீர் திருப்பம்! மாற்று இடம் தேடும் அரசு? விஜய் முக்கிய முடிவு!

இந்நிலையில், பல திட்டங்களின் மதிப்பீடு மற்றும் செலவு தொடர்பாக நிதித்துறை அதிகாரிகள் கேள்விகளை எழுப்பி, கோப்புகளை சம்பந்தப்பட்ட துறைகளுக்கே திருப்பி அனுப்புவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அதிக செலவு தேவைப்படும் சில திட்டங்கள் குறித்து, அவற்றை செயல்படுத்துவதன் அவசியம் மற்றும் நிதிச்சுமை தொடர்பாக விளக்கம் கேட்கப்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட கோப்புகள் பல்வேறு கேள்விகளுடன் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதித்துறையின் கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டால் மீண்டும் கோப்புகளை பரிசீலித்து ஒப்புதல் வழங்க முடியும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதே நேரத்தில், முதல்வர் மற்றும் அமைச்சர்களின் ஒப்புதலுடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கே நிதித்துறை தொடர்ந்து கேள்வி எழுப்புவது நடைமுறைப்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கருதுவதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடர் 2027 பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய அறிவிப்புகளை அதற்கு முன்பாக நடைமுறைப்படுத்துவதற்கு குறுகிய காலமே இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் தலைமைச் செயலர் மற்றும் முதல்வரின் தனிச் செயலர்கள் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் அரசு எடுத்த அதிரடி முடிவு? 55 ஆண்டுகளாக செயல்பட்ட மாநில திட்டக்குழுவின் அமைப்புக்கு மூடுவிழா!