இந்திய நாடாளுமன்றத்தில் இன்று ஆன்லைன் விளையாட்டுக்களை ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மசோதா, 2025 (The Promotion and Regulation of Online Gaming Bill, 2025) மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களால் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா ஆன்லைன் விளையாட்டுத் துறையை ஒழுங்குபடுத்துவதற்கும், பணம் சார்ந்த ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்வதற்கும், இ-விளையாட்டுகள், கல்வி விளையாட்டுகள் மற்றும் சமூக விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கும் வகை செய்யும் ஒரு முக்கியமான சட்ட முயற்சி.
இந்த மசோதாவின் முக்கிய நோக்கம், ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் சமூக, பொருளாதார, உளவியல் மற்றும் தனியுரிமை தொடர்பான பாதிப்புகளிலிருந்து, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதாகும்.இந்த மசோதா ஆன்லைன் விளையாட்டுத் துறையை ஒருங்கிணைந்த முறையில் ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு மத்திய அமைப்பை நிறுவுவதை முன்மொழிகிறது.

இந்த அமைப்பு, ஆன்லைன் விளையாட்டு தளங்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவதற்கும், கொள்கை ஆதரவை வழங்குவதற்கும், மூலோபாய மேம்பாட்டை உறுதி செய்வதற்கும் பொறுப்பாக இருக்கும். மசோதாவின் முக்கிய அம்சங்களில் ஒன்று, பணம் செலுத்தி விளையாடப்படும் மற்றும் பண வருமானத்தை எதிர்பார்க்கும் ஆன்லைன் விளையாட்டுகளை முற்றிலுமாக தடை செய்வது ஆகும். இதில் கணினி, மொபைல் சாதனங்கள் அல்லது இணையம் மூலம் இயக்கப்படும் இத்தகைய விளையாட்டுகளின் விளம்பரம், செயல்பாடு, ஊக்குவித்தல் மற்றும் பங்கேற்பு ஆகியவை தடை செய்யப்படுகின்றன. குறிப்பாக, மாநில எல்லைகளைக் கடந்து அல்லது வெளிநாட்டு அதிகார வரம்புகளில் இருந்து இயங்கும் தளங்களுக்கு இந்த தடை பொருந்தும்.
இதையும் படிங்க: வாக்கிங் சென்ற காங். எம்.பிக்கு நேர்ந்த கொடூரம்.. கழுத்தில் இருந்த செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்..!
ஆன்லைன் பெட்டிங் கேம்ஸ் சேவைகளை வழங்கினால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துறையை கண்காணிக்க தேசிய அளவில் National Online Gaming Commission உருவாகுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், e-Sports விளையாட்டுகளில், வெறும் பரிசு மற்றும் டிராபி ஆகியவற்றை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING: செப்.9 ல் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும்...தேர்தல் ஆணையம் அறிவிப்பு!