நாடு முழுவதும் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் உயர் நீதிபதிகளில் 12 சதவீதம் பேர் மட்டுமே சொத்துப்பட்டியல், கடன்களை வெளிப்படையாக அறிவித்துள்ளது தெரியவந்துள்ளது. 25 உயர் நீதிமன்றங்களில் மொத்தம் 769 நீதிபதிகள் பணியாற்றி வருகிறார்கள், அதில் 95 நீதிபதிகள் மட்டுமே சொத்துப்பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக எரிந்த நிலையில் பணம் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, நீதிபதிகளின், நீதித்துறையில் வெளிப்படைத்தன்மை கேள்விக்குள்ளானது. இதையடுத்து, நீதிபதிகள் தங்கள் சொத்துப்பட்டியல், கடன்கள் பட்டியலை வெளிப்படையாக இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: அமலாக்கத்துறைக்கு மனசாட்சியே இல்ல..! ஐகோர்ட்டில் டாஸ்மாக் ஊழியர்கள் வாதம்..!
கடந்த 1ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் 33 நீதிபதிகள் நடத்திய ஆலோசனையில் தங்களின் சொத்துப்பட்டியலை வெளிப்படையாக நீதிமன்ற இணையதளத்தில் பதிவிட முடிவு செய்தனர். தற்போதுள்ள நிலையில் 6 மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏறக்குறைய தங்கள் சொத்துப்பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

கேரள உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் 44 நீதிபதிகளில் 41 பேர் சொத்துப்பட்டியலை வெளியிட்டுள்ளனர், இங்கு 93.18 சதவீதம் பேர் சொத்துப்பட்டியலை இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் 12 நீதிபதிகளில் 11 பேர் 91.66 சதவீதம் சொத்துப்பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
ஆனால், சில உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் வெளிப்படையாக சொத்துக்களை வெளியிடுவது குறைவாக இருக்கிறது. குறிப்பாக சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் 16 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே சொத்துக்கணக்கை வெளியிட்டுள்ளார், சென்னை உயர் நீதிமன்றத்தில் 65 நீதிபதிகளில் 5 பேர் மட்டுமே சொத்துக்கணக்கை வெளியிட்டுள்ளனர்.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் 38 நீதிபதிகளில் 7 பேர் மட்டுமே சொத்துக்கணக்கை வெளியிட்டுள்ளனர். தற்போதுள்ள நிலையில் 33 நீதிபதிகள், குறிப்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உள்பட தங்கள் சொத்துப்பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
2023, ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற நிலைக்குழு தாக்கல் செய்த அறிக்கையில் “நீதிமன்ற செயல்முறை மற்றும் சீரமைப்பு” என்ற தலைப்பில் அறிக்கைத் தாக்கல் செய்தது. இதில் குறிப்பாக அனைத்து நீதிபதிகளும் ஒவ்வொர ஆண்டும் தங்களின் சொத்துக்கள் கணக்கை வெளியிட வேண்டும் என்று அறிவித்திருந்தது.

எம்.பி.க்கள் அல்லது எம்எல்ஏக்கள் சொத்துக்களை அறியவம், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்துக்களை அறிய பொதுமக்களுக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அப்படியானால், நீதிபதிகள் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை வெளியிட வேண்டிய அவசியமில்லை என்பது தர்க்கத்திற்கு முரணானது. அரசு பதவியில் இருந்து கருவூலத்தில் இருந்து ஊதியம் பெறும் எவரும் தங்கள் ஆண்டு வருமானம், பட்டியலை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஐஏஎஸ், ஐபிஎஎஸ் அதிகாரிகள் ஏற்கெனவே ஆண்டுதோறும் சொத்துப்பட்டியலை வெளியிட்டு வரும் நிலையில் தலைமை தணிக்கை கணக்குப்பதிவு அதிகாரி, அமைச்சர்களும் ஆண்டுதோறும் சொத்துக்கணக்கை வெளியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சூதாட்ட கம்பெனிகள் தான் திமுக அரசுக்கு முக்கியமா..? சாட்டையடி கொடுத்த ராமதாஸ்..!