காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்டதற்கு மோடி அரசின் சரியான பதிலடிதான் ஆப்ரேஷன் சிந்தூர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதத்தோடு தெரிவித்தார்.

பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்ப யணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்தியா சார்பில் பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 10 நாட்களாக ராஜாங்கரீதியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அந்த நாட்டை முடக்கியது. பொருளதார ரீதியாக பாகிஸ்தானுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ராஜதந்திர நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்தது.
இதையும் படிங்க: பாக். தீவிரவாதிகளை இந்தியா கண்டறிந்தது எப்படி..? 'ஆப்ரேஷன் சிந்தூர்' வெற்றிக்கு உதவிய ‘என்டிஆர்ஓ’ என்றால் என்ன?
இந்நிலையில் தீவிரவாதிகளை ஒழிக்கும் செயலுக்கு முப்படைகளுக்கும் சுதந்திரம் அளித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து கடந்த இரு நாட்களாக முப்படைத் தளபதிகள் பிரதமர் மோடியை தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

யாரும் எதிர்பாரா நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகள், தீவிரவாதிகளின் முகாம்கள், பயிற்சிக் கூடங்கள், தலைமை அலுவலகம், உள்கட்டமைப்புகள் ஆகியவற்றை இந்திய ராணுவத்தின் விமானப்படை நள்ளிரவு குண்டுவீசி அழித்தது. ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையில் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகளுக்கு பேரழிவை இந்திய ஏற்படுத்தியுள்ளது. லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகமது உள்ளிட்ட தீவிரவாதிகள் அமைப்பின் 9 இடங்களை இந்திய ராணுவம் அழித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய ராணுவம் எடுத்த “ஆப்ரேஷன் சிந்தூர்” வெற்றி பெற்றதையடுத்து, மத்திய உள்துறை அமித் ஷா பெருமிதம் கொண்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ இந்தியா மீதும், இந்திய மக்கள் மீதும், எந்த தாக்குதல் நடத்தப்பட்டாலும் மோடி அரசு சரியான பதிலடி கொடுக்கும். தீவிரவாதத்தின் ஆனிவேரை முற்றிலும் ஒழிக்கும் வகையில் பாரதம் தீர்மானமாக இருக்கிறது. எங்கள் ராணுவத்தின் நடவடிக்கையை நினைத்து பெருமைப்படுகிறோம். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை என்பது பஹல்காமில் எங்கள் அப்பாவி சகோதரர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் தகுந்த பதிலடி” எனத் தெரிவித்தார்.

பாஜக தேசியத் தலைவரும், மத்தியஅ மைச்சருமான ஜே.பி.நட்டா எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியாவின் செய்தி என்னவென்றால், எங்களை சீண்டினால், உங்களை சும்மாவிடமாட்டோம். இந்தியாவின் ஆத்மாவை தாக்கியவர்கள் மீது கடுமையான தண்டனைவழங்குவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தீவிரவாதத்தை அதன் வேரோடு ஒழிக்க இந்தியாவுக்கு திறமையும், திறனும் இருக்கிறது. தீவிரவாதத்தை அடியோடு ஒழிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: போர் ஒத்திகை அலர்ட்.. சென்னையில் 4 இடங்கள் தேர்வு.. 54 ஆண்டுகள் கழித்து நடக்கும் சம்பவம்..!