இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நிலவும் அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் குறித்து அந்நாட்டு அமைச்சர்களே வெளிப்படையாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவுடன் ஒப்பிட்டு பாகிஸ்தானின் தற்போதைய நிலையை பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் விமர்சித்துள்ள நிலையில், அரசு இதே பாதையில் தொடர்ந்தால் ஆட்சிக்காலம் முடிவதற்குள் கவிழும் என உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் பேசுகையில், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே காலகட்டத்தில் சுதந்திரம் பெற்ற நாடுகள் என்றாலும், இரு நாடுகளின் தற்போதைய வளர்ச்சியில் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பலூசிஸ்தானில் நிலைமை கட்டுப்பாட்டை விட்டு விலகுவதாகவும், கைபர் பக்துன்க்வாவில் மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வருவதாக அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இம்ரான் கானுக்காக களமிறங்கிய 21 முன்னாள் கேப்டன்கள்! ஷெபாஸ் ஷெரீபுக்கு பறந்த பரபரப்பு கடிதம்!!
இதனுடன், தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, பொருளாதாரம் மற்றும் சர்வதேச அளவிலான செல்வாக்கு ஆகியவற்றில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் ஆசிப் சுட்டிக்காட்டியுள்ளார். பாகிஸ்தான் தன்னை ஒரு ஜனநாயக நாடு என்று அழைத்துக் கொள்வதற்கு முன்பு, நாட்டின் தற்போதைய நிலை குறித்து மக்கள் தங்களைத் தாங்களே கேள்வி கேட்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவை குறை கூறுவதை விட, பாகிஸ்தானை தற்போதைய நிலைக்கு கொண்டு வந்தது யார், தவறான கொள்கைகள் என்ன என்பதைக் குறித்து நாட்டுக்குள் விவாதம் நடைபெற வேண்டும் என்றும் ஆசிப் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வியின் கருத்தும் கவனம் பெற்றுள்ளது. அரசு தற்போதைய அணுகுமுறையிலேயே தொடர்ந்து செயல்பட்டால், அதன் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே ஆட்சி கவிழக்கூடும் என்று அவர் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
நான்கு மாகாணங்களிலும் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாகவும், பொதுமக்களின் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை குறைந்து வருவதாகவும் நக்வி தெரிவித்துள்ளார். பலூசிஸ்தான், கைபர் பக்துன்க்வா மற்றும் காஷ்மீர் பகுதிகளில் நிலவும் பிரச்னைகளுடன் பணவீக்கம், வேலையின்மை போன்ற பொருளாதாரச் சிக்கல்களும் நாட்டை பாதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டின் முக்கிய முடிவுகளை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் எடுக்கிறதா அல்லது ராணுவம் எடுக்கிறதா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார். சுயமாக முடிவெடுக்க முடியாத ஒரு அரசாங்கம் நீண்ட காலம் எவ்வாறு நீடிக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்நாட்டு அமைச்சர்களின் இந்த வெளிப்படையான கருத்துகள், பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியல் மற்றும் பொருளாதார நிலை குறித்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: நள்ளிரவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இம்ரான் கான்! உடல்நலக் கவலை! வெளியானது முக்கிய தகவல்!