தமிழக அரசு டாஸ்மாக் தொழிலாளர்களுக்கான தெளிவான தொழிலாளர் நலக் கொள்கையை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும், அடிப்படை பணிப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பின்றி மாநிலம் முழுவதும் சுமார் 23,000 தொழிலாளர்கள் கையறு நிலையில் தவித்து வருவதாகவும் டாஸ்மாக் ஊழியர் சங்கம் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
பொள்ளாச்சி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் டாஸ்மாக் சங்க ஊழியர்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டு தங்களது நீண்டகாலக் கோரிக்கைகள் மற்றும் களப் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதித்தனர்.
தொழிலாளர் நலச் சட்டத்தின்படி வரையறுக்கப்பட்ட 8 மணி நேரப் பணி வரம்பைத் தாண்டி, கூடுதல் நேரப் பணிச்சுமைக்கு ஆளாக்கப்படுவதாகவும், மதுபான சில்லறை விற்பனைக் கடை ஊழியர்களுக்கு முறையான நிலையான சட்ட விதிகளோ பணி விதிகளோ இதுவரை உருவாக்கப்படவில்லை என்றும் ஊழியர்கள் கொந்தளித்தனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் செந்தில்பாலாஜி ஆஜர்! அதிகாரிகள் விசாரணை!

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆறுமுகம் பேசுகையில், டாஸ்மாக் நிர்வாகத்தில் இடைவிடாத வேலைப்பளு காரணமாக ஊழியர்களுக்குத் தொடர் மன உளைச்சலும் கடுமையான உடல்நலக் கோளாறுகளும் ஏற்படுகின்றன; ஊழலை முழுமையாகத் தடுத்துவிட்டதாகத் தம்பட்டம் அடிக்கும் தற்போதைய அரசு, உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளையும் அவர்களுக்கான கொள்கைகளையும் வெளிப்படையாக அறிவிக்க மறுப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார். தொழிலாளர் நலனில் அரசு காட்டும் இந்த அலட்சியப் போக்கு தொடர்ந்தால் டாஸ்மாக் நிர்வாகத்தின் இயக்கம் முற்றிலுமாக முடங்கும் எனவும் அவர் எச்சரித்தார்.
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், பணி நேரக் கட்டுப்பாடு மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட வாழ்வாதாரக் கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் மாபெரும் முழு வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக இக்கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: உச்சநீதிமன்றம் வைத்த குட்டு... டாஸ்மாக் வழக்கில் நடந்த திடீர் திருப்பம்... செந்தில் பாலாஜி எடுத்த முக்கிய முடிவு...!