மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களில் கடந்த ஜூலை 25-ஆம் தேதி ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டி, வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி தலைநகர் டெல்லியில் மாபெரும் அமைதிப் பேரணி முன்னெடுக்கப்பட உள்ளதாகக் கரப்பான் ஜனதா கட்சி (Cockroach Janta Party - CJP) அதிரடியாக அறிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா கேட் பகுதியில் இருந்து தொடங்கிப் புதுடெல்லி காவல்துறை தலைமை அலுவலகம் வரை நடைபெற உள்ள இந்தப் பிரம்மாண்டப் பேரணிக்கு, நீட் தேர்வின் கடுமையான மன உளைச்சலால் உயிரிழந்த அப்பாவி மாணவர்களின் குடும்பத்தினரும், முந்தைய போராட்டங்களின் போது காவல்துறையின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்ட இளைஞர்களும் முன்னின்று தலைமை தாங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் இந்த உரிமைப் பேரணியில் திரளாகப் பங்கேற்க உள்ளதாகவும் ஒருங்கிணைப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அரசு பள்ளியில் ஏன் சேர்க்கல? அமைச்சர்கள், அதிகாரிகளை நோக்கி கேள்வி எழுப்பிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!
மாணவர்களின் தொடர் போராட்டங்களை அடுத்துத் தேர்வு சீர்திருத்தங்கள், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நீதி மற்றும் முறைகேடுகள் மீதான வெளிப்படையான நடவடிக்கைகள் குறித்து அரசு பல்வேறு உறுதிமொழிகளை அளித்த போதிலும், களத்தில் எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை என அவ்வமைப்பு மிகக் காட்டமாகச் சாடியுள்ளது. ஏமாற்றப்பட்ட மாணவர் சமுதாயத்தின் நீதிக்காகவும், தேர்வு முகமைகளின் பொறுப்புடைமையை நிலைநாட்டவும் இந்த அறவழிப் போராட்டம் மேலும் தீவிரமடையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "E20 வேணாம், 100% பெட்ரோல் வேண்டும்!" நிதின் கட்கரிக்கு எதிராக உருவான 'E20 ஜனதா கட்சி'!