நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் அமளிகளுக்கு காங்கிரஸ் கட்சிதான் முழு பொறுப்பு என்று மத்திய பார்லிமென்ட் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடுமையாக விமர்சித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பார்லிமென்ட் என்பது ரவுடித்தனம் செய்வதற்கான இடமில்லை. எதிர்க்கட்சியினர் இதுபோன்று செயல்பட்டாலும், அரசு நிதானத்துடன் செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தின் போது ராகுல் காந்தி பேச முயன்றபோது, மத்திய அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் 8 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். பிரதமர் மோடி உரை நிகழ்த்துவதாக இருந்த நிலையில், திடீரென அது ரத்து செய்யப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: 3வது நாளாக தொடரும் அமளி!! லோக்சபா ஒத்திவைப்பு! பிப்.,9 காலை வரை ஒத்திவைத்து ஓம்பிர்லா அறிவிப்பு!
இதுகுறித்து விளக்கமளித்த கிரண் ரிஜிஜூ, “லோக்சபாவில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடக்க வேண்டும் என்பதை ராகுல் காந்தி விரும்பவில்லை என்று தோன்றுகிறது. அவரது பிடிவாதத்தால் அவை நடவடிக்கைகள் முடக்கப்படுகின்றன. காங்கிரஸ் எம்பிக்களின் நடத்தையால் சபாநாயகர் ஓம் பிர்லா மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார்” என்று குற்றஞ்சாட்டினார்.

மேலும் அவர் கூறியதாவது: “அரசு எப்போதும் விவாதத்திற்கு தயாராக உள்ளது. ஆனால் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தினால், முக்கிய விவாதங்களை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அமளி தொடர்ந்தால் பட்ஜெட்டை குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்ற வேண்டிய சூழல் வரும். அப்போது எதிர்க்கட்சியினர் பேசுவதற்கான வாய்ப்பை இழக்க நேரிடும். இதற்கு காங்கிரஸ் கட்சிதான் பொறுப்பு.”
பிரதமர் மோடி அவைக்கு வரும்போது காகிதங்களை பிடுங்குவதற்கு எதிர்க்கட்சி பெண் எம்பிக்கள் திட்டமிட்டதாக கூறப்பட்டதால், சபாநாயகர் அவரை வர வேண்டாம் என அறிவுறுத்தியது சரியான முடிவு என்றும் ரிஜிஜூ வாதிட்டார். “பார்லிமென்ட் என்பது மக்களுக்கான சட்டமியற்றும் இடம். ரவுடித்தனம் நடத்துவதற்கான இடம் அல்ல” என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த கருத்துகள் நாடாளுமன்றத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன. எதிர்க்கட்சிகள் இதை “அரசின் அடக்குமுறை” என்று குற்றஞ்சாட்டி வருகின்றன. மக்களவை விவகாரங்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், விவாதம் நடைபெறாமல் பட்ஜெட் நிறைவேற்றப்படுமா என்பது இப்போது பெரும் கேள்வியாக எழுந்துள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடியை தாக்க சதித்திட்டம்!! பெண் எம்பிக்கள் மீது புகார்! சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டு!!