பிரதமர் நரேந்திர மோடி, ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு நான்கு நாள் சுற்றுப்பயணமாக இன்று (டிசம்பர் 15) காலை டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். இந்தப் பயணம் டிசம்பர் 18-ம் தேதி வரை நீடிக்கும். முதலில் ஜோர்டான் செல்லும் பிரதமர் மோடி, அங்கு டிசம்பர் 15 முதல் 16 வரை தங்கியிருப்பார்.
ஜோர்டானில், அந்நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியா-ஜோர்டான் தூதரக உறவுகள் 75 ஆண்டுகளை எட்டியிருக்கும் நிலையில் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
பின்னர், டிசம்பர் 16-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை எத்தியோப்பியாவுக்குச் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் அபிய் அகமது அலியை சந்திப்பார். எத்தியோப்பியாவுக்கு இது அவரது முதல் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. உலக தெற்கு நாடுகளின் கூட்டாளியாக இந்தியாவும் எத்தியோப்பியாவும் இணைந்து செயல்படுவதை வலியுறுத்தும் வகையில் ஆலோசனைகள் நடைபெறும்.
இதையும் படிங்க: ராமதாஸ் - அன்புமணி இடையே முற்றும் மோதல்! திருமண விழாவிலும் சந்திக்க மறுப்பு!

இறுதியாக, டிசம்பர் 17 முதல் 18 வரை ஓமன் செல்லும் பிரதமர், அந்நாட்டு சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை சந்திப்பார். இந்தியா-ஓமன் தூதரக உறவுகள் 70 ஆண்டுகளை எட்டியிருக்கும் நிலையில், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்படும்.
பல நூற்றாண்டுகள் பழமையான நட்புறவு மற்றும் வர்த்தகத் தொடர்புகளை கொண்ட இரு நாடுகளின் உறவு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பயணம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “அடுத்த மூன்று நாட்களில் ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்குச் செல்கிறேன். இந்த மூன்று நாடுகளும் இந்தியாவின் நெருங்கிய கூட்டாளிகள். பழங்கால நாகரிகத் தொடர்புகளும், வலுவான இருதரப்பு உறவுகளும் கொண்டவை” என்று கூறியுள்ளார்.
இந்தச் சுற்றுப்பயணம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வலுப்படுத்துவதோடு, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளில் இந்தியாவின் செல்வாக்கை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிங்க: யாருடன் கூட்டணி..? டைம் இருக்கு., ஆனா இது நடக்கும்… TTV தினகரன் ப்ளீச் பேச்சு…!